மலையக அதிகார சபை வலுப்படுத்தப்படும் – இராமலிங்கம் சந்திரசேகர்

மலையக அபிவிருத்தி அதிகார சபை இல்லாதொழிக்கப்படாதென்றும் அது தொடர்பில் அரசாங்கம் எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அந்த அதிகார சபையை விரிவாக்கம் செய்து முன்னெடுத்துச் செல்வதே அரசாங்கத்தின் தீர்மானம். மலையக மக்களையும் அவர்களுக்கான நிறுவனங்களையும் அரசாங்கம் பாதுகாக்கும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று மனோ கணேசன் எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் சந்திரசேகர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; மலையக அபிவிருத்தி

அதிகார சபையை அரசாங்கம் ஒரு போதும் இல்லாதொழிக்காது. அவ்வாறான ஒரு தீர்மானமும் கிடையாது.

பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையிலான குழுவில் மேற்படி அதிகார சபையை மேலும் விரிவு படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதே தவிர, அதனை இல்லாதொழிக்கும் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

அந்த வகையில் மலையக அபிவிருத்தி அதிகார சபை எந்த வகையிலும் இல்லாதொழிக்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் தெரிவித்தார் .இது தொடர்பில் சபையில் குறுக்கீடு செய்து கருத்து தெரிவித்த மனோ கணேசன் எம்பி;

அமைச்சர் இவ்வாறு தெரிவித்தாலும் ஜனாதிபதி எனக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேற்படி அதிகார சபை தொடர்பில் பிரச்சினை காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். அவ்வாறான சம்பந்தப்பட்ட அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் இது தொடர்பில் முறையாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மீண்டும் அதற்கு பதிலளித்த அமைச்சர் சந்திரசேகர்;

மேற்படி அதிகார சபையை இல்லாதொழிக்கப்போவதில்லை என்பது அரசாங்கத்தின் தீர்மானமாகும். அந்த வகையில் அதை விரிவாக்கம் செய்து முன்னெடுத்துச் செல்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

அதை விடுத்து மனோ கணேசன் எம்பி கூறுவது போன்று, பொது பிரச்சனைகள் காணப்பட்டால் அது தொடர்பில் நாம் உரிய கவனம் செலுத்தி பேச முடியும் என்றும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய பல விடயங்கள் இருந்தும் அதனை மேற்கொள்ள முடியாமற் போயுள்ளது.எனினும் நாம், மலையக மக்களுக்கு சேவைகளை வழங்கக்கூடிய நிறுவனம் இருக்குமானால் எந்த விதத்திலும் அதனை இல்லாதொழிக்கப் போவதில்லை. அந்த வகையில் நாம் அவற்றையும் பாதுகாத்து மலையக மக்களையும் பாதுகாப்போம் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றும் தெரிவித்தார்.மனோ கணேசன் எம்பி கூறுவது போன்று எமது அதிகாரிகள் எவரும் மேற்படி அதிகார சபை தொடர்பில் மாற்றுக் கருத்துக்களை கொண்டிருக்கவில்லை. அவர்கள் மலையக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று மனப்பாங்குடனேயே செயல்படுகின்றனர்.

நன்றி

Leave a Reply