வெளிநாட்டு சேவை அதிகாரிகளுக்காக நிறுவப்பட்டுள்ள இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவகம் மற்றும் மாலைத் தீவின் வெளிநாட்டு சேவைகள் நிறுவகத்திற்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்புக்களை மேம்படுத்துதல் மற்றும் புரிந்துணர்வை அதிகரிக்கும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்தவகையில் கற்கை நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் ஏனைய கற்கை நடவடிக்கைகள் தொடர்பாக தகவல் பரிமாற்றம், கல்வியியலாளர்கள், மாநாடுகளுக்கான வளவாளர்கள் மற்றும் ஆர்வங்காட்டுகின்ற துறைசார் நிபுணர்கள் பரிமாற்றம், இருநாடுகளாலும் வழங்கப்படுகின்ற பயிற்சிகளில் கலந்து கொள்வதற்கு இராஜதந்திர அதிகாரிகளுக்கு வாய்ப்பு வழங்குதல் மற்றும் கொழும்பு மற்றும் மாலே போன்ற நகரங்களில் பாடநெறிகள் மற்றும் மாநாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கமைய, இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவகம் மற்றும் மாலைதீவின் வெளிநாட்டு சேவைகள் நிறுவகத்திற்கும் இடையில் முன்மொழியப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.