மிலிந்த மொறகொடவின் இராஜதந்திரமும் அநுர அரசாங்கமும்

*இந்தியாவுடன் தொப்புள்| கொடி உறவு என்று ஈழத்தமிழர்கள் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், பௌத்த சிங்கள – மௌரியர் பண்பாட்டு அடிப்படையில் ”இரட்டையர்கள்” என்ற புதிய கருத்தியலை உருவாக்கும் “இலங்கை அரசு”

*தமிழர்களை மையப்படுத்திய இந்திய – இலங்கை உறவு என்பதைவிடவும், பௌத்த சிங்கள மக்களை மையப்படுத்திய வட இந்திய உறவுதான் இந்த ”இரட்டை நாகரிகம்” என்பதை நிறுவி இந்தியாவுடன் தங்களைச் சமநிலைப்படுத்த சிங்களத் தலைவர்கள் முயற்சி-

*தொப்புள் கொடி உறவு என்று கூறி தங்களை இரண்டாம் தர பிரஜைகள் ஆக்கியுள்ளனர் தமிழர்கள்!

-அ.நிக்ஸன்-

இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தான நாள் முதல் இன்றுவரை ஏறத்தாள 38 வருடங்களாக சிங்கள அரசியல் தலைவர்கள் ”இலங்கை ஒற்றையாட்சி அரசு” என்ற கட்டமைப்பு என்பதை மேலும் நிறுவியுள்ளனர்.

ஆனால் , ஒப்பந்தம் கைச்சாத்திடக் காரண – காரியமாக இருந்த ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த விடயங்களில் எந்தவித முன்னேற்றங்களும் இல்லை. முப்பது வருட ஆயுதப் போராட்டத்தின் குழந்தைதான் ஒப்பந்தத்தின் மூலம் பெறப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டம்.

ஆனால் அச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை
என்பதைவிடவும் அச்சட்டத்தில் இருந்து 13 வகையான அதிகாரங்கள் அதாவது, மாகாண சபைகளுக்கு உரிய விதிகள் கொழும்பு நிர்வாகத்தினால் மீள பெறப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் மாகாண சபைகளிடம் இருந்து போக்குவரத்து அதிகார சபையின் சில அதிகாரங்கள் கூட கொழும்பை மையமாகக் கொண்ட இலங்கைப் போக்குவரத்து அதிகாரசபையிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டுக் கொண்டிருக்கும் அதேநேரம் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மூலத்தை பயன்படுத்தி, இலங்கை அரசு குறிப்பாக சிங்கள தலைவர்கள் இந்திய – இலங்கை உறவு என்பதையும் அதன் நாகரிகத்தையும் மடைமாற்றி வருகின்றனர்.

இந்தியாவின் ஒரிசா மாநிலத்தின் ஊடாகவே இலங்கைக்கு பௌத்த சமயம் வந்ததாக இந்திய தொல்லியல் நிபுணர் அமர்நாத், ஏற்கனவே வரலாற்றைத் திரிபுபடுத்தி வரும் நிலையில், வட இந்தியாவுடன் தமக்குள்ள உறவு குறிப்பாக நாகரிக உறவு என்பதை ”இரட்டையர்கள்” (Twins) என்ற அடிப்படையில் முன்னாள் அமைச்சரும் இந்தியாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவருமான மிலிந்த மொறகொட நிறுவி வருகிறார்.

தூதுவர் பதவியில் இருந்து விலகிய பின்னரும் அவர் புதுடில்லியில் தங்கியிருந்து இந்த இரட்டையர்கள் என்ற கருத்தியலை தொடர்ந்து நிறுவி வருகிறார். மௌரியர் கால பண்பாட்டைக் கொண்ட இந்தி மொழியை மையப்படுத்திய ஆரியர்களும் சிங்களவர்களும் இரட்டையர்கள் என்ற கருப்பொருள் உருவாக்கப்பட்டு ”இரட்டை நாகரிகம்” (Civilizational twins) என்ற பொருளில் அவ்வப்போது புதுடில்லியில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே ஒரு நெருங்கிய மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்த கலாசார மற்றும் வரலாற்று உறவு உள்ளது எனவும் இது ஒரு இரட்டை நாகரிகம் என்றும் வியாக்கியானம் செய்யப்படுகின்றது. இந்தியாவின் பிரபல செய்தி இணையமான (Wion) வியோன் ஊடகத்தின் தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள நேர்காணலில் மிலிந்த மொறகொட இந்த வியாக்கியானத்தை கொடுத்துள்ளார்.

புத்தர் – ராமர் என்ற வரலாற்று இதிகாசங்களை மையமாகக் கொண்டு சிங்கள ஆரிய உறவு நீடித்தது என்ற அடிப்படையில் தாங்கள் இரட்டையர்கள் என்ற தொனியில் அவர் கற்பிதம் செய்கிறார்.

குறிப்பாக அசோகரின் பௌத்த கொள்கைகளினால் எழுந்த பௌத்த மத செல்வாக்கிற்கு அதாவது, அசோகரின் ஆட்சியில் பௌத்த மத சின்னங்கள் பரவலாக பயன்படுத்தப்பட்ட விவகாரங்களோடு மிலிந்த மொறகொட இலங்கை பௌத்த கொள்கைகளை ஒப்பிடுகிறார்.

இக் கருத்தியல் அடிப்படையில் புதுடில்லியில் சமீபத்தில் இடம்பெற்ற இரட்டையர் நாகரிகம் என்ற தொனிப் பொருளில் இடம்பெற்ற மாநாடு ஒன்றிலும் கொழும்பில் இருந்த அப்போதைய தூதுவர் சந்தோஷ் ஜயா இந்த இரட்டை நாகரிகம் என்பதை வலியுறுத்தியிருக்கிறார்.

இந்தியாவின் பிரபல பொருளியல் நிபுணர் பேராசிரியர் நாகநாதன் சென்னையில் கடந்த மே மாதம் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் இந்த இரட்டையர் நாகரிகம் என்ற கருத்தியலை சிங்கள அரசியல் தலைவர்கள் இந்திய மத்திய அரசுக்கு விதைத்துள்ளனர் என்றும், அதன் அடிப்படையில்தான் இலங்கையில் உள்ள பௌத்த பீடாதிபதிகளையும் இந்திய அரசியல் தலைவர்கள் எதிர்காலத்தில் காலில் விழுந்து வணங்கும் நிலை உருவாகும் என்றும் கூறியிருக்கிறார்.

பிரதமர் மோடி மே மாதம் இலங்கைக்கு வந்தபோது பௌத்த பீடாதிபதி ஒருவரின் காலில் விழுந்து முதற்தடவையாக வணக்கம் செலுத்தியமை இந்த அடிப்படையில் என்ற கருத்தை பேராசிரியர் நாகநாதன் முன்வைத்திருந்தார்.

ஆகவே, இப் பின்னணியில், இந்த இரட்டை நாகரிகம் என்ற கருத்தியலை உருவாக்கியதன் மூலம் வட இந்தியாவை மையமாகக் கொண்ட உறவும் அதன் மூலமான அரசியல் – பொருளாதார உறவும் அதன் நீட்சியும் ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்திய மத்திய அரசின் தலையீட்டில் மாற்றத்தை உருவாக்கும் என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.

ஏற்கனவே 13 ஆவது திருத்தச் சட்டம் ஒன்றைத் தவிர வேறு எந்த ஒரு அரசியல் தீர்வுக்கும் இந்திய மத்திய அரசு இணங்கி வராத சூழலில், தற்போது உருவாக்கப்பட்டுள்ள ”இரட்டை நாகரிகம்” என்ற கருத்தியல் இந்திய – தமிழக மற்றும் ஈழத்தமிழர் உறவில் பாரிய விரிசலை உருவாக்கலாம் என்ற ஐயங்கள் இல்லாமலில்லை.

ஆனால், இந்த இந்திய – இலங்கை நாடுகளுக்கு இடையே ஒரு நீண்ட மற்றும் சிக்கலான தொடர்பு உள்ளது, இது மத, மொழி, பண்பாடு மற்றும் அரசியல் பரிமாற்றங்களால் குறிக்கப்படுகிறது.

ஆனால், அவற்றை முற்றாக மாற்றியமைத்து பௌத்த – இந்து உறவு என்ற தளத்தை மையப்படுத்திய, ஆனால் சைவ தமிழர்கள் அல்லது சைவ சமயம் என்ற கோட்பாட்டின் முதன்மையை மாற்றி இந்திய – இலங்கை உறவு என்ற அடிப்படையை தோற்றுவிப்பதே இதன் நோக்கமாக இருக்கலாம்.

இருந்தாலும் ஈழத்தமிழர்களும் தமிழ் நாட்டுத் தமிழர்களும் முரண்படாத வகையில் இந்த இந்த இரட்டை நாகரிகம் என்ற கருத்தியலை புதுடில்லியில் அவ்வப்போது நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ஆய்வுக் கூட்டங்களில் சில இந்திய ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இருந்தாலும், மிலிந்த மொறகொட போன்ற சிங்கள இராஜதந்திரிகளின் நோக்கம் வேறு, குறிப்பாக ஈழத்தமிழர்களை மையப்படுத்திய இந்திய – இலங்கை உறவு என்பதைவிடவும், பௌத்த சிங்கள மக்களை மையப்படுத்திய வட இந்திய உறவுதான் இந்த ”இரட்டை நாகரிகம்” என்பதை நிறுவ முற்படுகின்றனர்.

அப்படித்தான் நிறுவப்பட்டுமுள்ளது. ஆனால், இது இன்னமும் அதிகாரபூர்வமாக மேலெழவில்லை. இப் பின்னணியில்தான் சில இந்திய தொல்லியல் ஆய்வாளர்கள் இந்த இரட்டை நாகரிகம் என்பதற்கு பின்வருமாறு கற்பிதம் செய்கின்றனர். இந்தியா – இலங்கை உறவு வரலாற்று ரீதியாக ஆழமானது. இலங்கையின் வரலாறு மற்றும் கலாசாரத்தில் இந்திய கலாசாரத்தின் தாக்கம் மிகவும் குறிப்பிடத்தக்கது.

பண்டைய காலங்களில், இந்திய ஆட்சியாளர்கள் இலங்கையை ஆண்டனர், மேலும் இலங்கையின் கலாசாரத்தில் இந்திய கலாசாரத்தின் தாக்கம் உண்டு. அதேநேரம் பௌத்தம் இந்து ஆகிய இரு மதங்களும் இலங்கை மற்றும் இந்தியாவின் முக்கிய மதங்களாகும்.

பௌத்தம் இலங்கையில் தோன்றியதாகக் கூறப்பட்டாலும், அதன் தோற்றம் மற்றும் பரவல் இந்தியாவில் வேரூன்றியுள்ளது. இந்து மதம் இலங்கையில் பரவலாக உள்ளது, மேலும் இந்தியாவிலிருந்து இலங்கை வந்த இந்து துறவிகள் மற்றும் அறிஞர்களால் இது பரப்பப்பட்டது.

அதேநேரம், நூற்றாண்டுகளுக்கும் மேலான இந்தியா – இலங்கை பண்பாட்டு பரிமாற்றங்கள் உண்டு. இப் பரிமாற்றங்கள் கலை, இலக்கியம், இசை, நடனம் மற்றும் உணவு போன்ற பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகின்றன. இதேபோன்று தமிழ் மொழி இலங்கை மற்றும் இந்தியாவின் தெற்குப் பகுதிகளில் பரவலாகப் பேசப்படுகிறது.

இந்தோ-ஆரிய மொழி குடும்பத்தைச் சேர்ந்த சிங்களம், இலங்கையின் முக்கிய மொழியாகும். இந்திய – இலங்கை நாடுகளில் அரசியல் உறவுகள் சிக்கலானவை. இரு நாடுகளும் வெவ்வேறு அரசியல் அமைப்புகளைக் கொண்டுள்ளன, ஆனால் அவை பல பொதுவான நலன்களைப் பகிர்ந்து கொள்கின்றன.

சுருக்கமாக, இந்தியா மற்றும் இலங்கை இரண்டும் ஒருவருக்கொருவர் தொடர்புடைய பண்பாடுகள் மற்றும் நாகரிகங்களை கொண்டுள்ளன. இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவு வரலாற்று ரீதியாக ஆழமானது மற்றும் பன்முகத்தன்மை கொண்டது.

ஆகவே, இது ஒரு இரட்டை நாகரிகம் என்ற தொனியில் இந்திய கருத்தியலாளர்கள் வியாக்கியானம் செய்கின்றனர்.

ஆனால் மிலிந்த மொறகொட இவ்வாறு கற்பிதம் செய்கிறார். இந்திய – இலங்கை உறவு என்பது நாகரிகத்தின் இரட்டையர்களாகவே கருத முடிகிறது. மதங்கள், மொழிகள் மற்றும் கலாசாரங்களின் பன்முகத்தன்மையை இரு தரப்புமே ஒரே மாதிரி கொண்டுள்ளது.

ஜனநாயகத்தின் மீதான பார்வை, பொருளாதார சூழல் மற்றும் புவிசார் மூலோபாயம் போன்றவற்றிலும் இலங்கை ஒத்திசைந்து செயற்படுகின்றது. இரு தேசங்களினது மக்களின் உறவுகளும் வலுவாக உள்ளது. இந்த பொதுவான பன்முகத்தன்மைகள் இலங்கை – இந்திய உறவின் உறுதியான அடித்தளத்தை வெளிப்படுத்துவாக மிலிந்த மொறகொட விளக்குகிறார்.

மிலிந்த மொறகொடவின் விளக்கமும் இந்திய ஊடகங்கள் பலவற்றில் அவர் கூறி வருகின்ற இந்த இரட்டையர்கள் என்ற கருத்தியலும் பௌத்த சிங்கள மௌரியர் பண்பாட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது என்பதை தெளிவாக உணர முடிகிறது.

ஆனால், இது பற்றிய எந்தவொரு புரிதல்களும் தேடல்களும் அற்ற நிலையில் ஈழத்தமிழர்களும் மற்றும் ஈழத்தமிழ் தொல்லியல் ஆய்வாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் அமைதியாக இருக்கின்றனர்.

இந்தியாவுக்கும் குறிப்பாக தமிழகத்துக்கும் ஈழத்தமிழர்களுக்கும் தொப்புள் கொடி உறவு உள்ளதாகக் கூறி தமக்குள்ளேயே பெருமைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், சிங்கள அரசியல் தலைவர்கள் ‘இலங்கை அரசு’ என்ற கட்டமைப்பின் ஊடாக இந்திய – இலங்கை உறவு என்பதை ”இரட்டையர்கள்” என்று வரையறை செய்து ஆரியர்களை மையப்படுத்திய இந்திய மொழியையும் வட இந்திய பண்பாடுகளையும் பௌத்த சிங்கள பண்பாட்டையும் சமநிலையில் மாற்றியமைத்து வருகின்றனர்.

ஆனால், ஈழத்தமிழர்கள் கூறுகின்ற தொப்புள் கொடி உறவு என்பது இரண்டாம் தரமானது. அதாவது இரண்டாம் தர பிரஜைகள் என்ற அர்த்தத்தை கொண்டது.

ஆனால், சிங்கள மக்கள் தங்களை இந்திய மௌரியர் பண்பாட்டுடன் ஒப்பிட்டு வட இந்தியாவுடன் தங்களைச் சமநிலைப்படுத்தி வருகின்றனர். இத்தனைக்கும் இலங்கை ஒரு சிறிய நாடு பொருளாதார நெருக்கடியுள்ள ஒரு நாடு.

ஆனால் துணிவோடு தங்கள் நாட்டையும் தங்கள் மொழி பண்பாட்டையும் வட இந்தியாவுடன் ஒப்பிட்டு ”இரட்டையர்கள்” அதாவது ”இரட்டை நாகரிகம்” என்று வரலாற்றில் பதிவு செய்கின்றனர்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கம் செய்ய வேண்டும் என்று மிலிந்த மொறகொட போன்ற இராஜதந்திரிகளும் பேராசிரியர் ரொஹான் குணவர்த்தன போன்ற இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு விவகார ஆலோசகர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இப் பின்புலத்தில், ஜேவிபி எனப்படும் அநுர அரசாங்கம், கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால், தனிப்பட்ட அரசியல் மோதல்களுக்கு அப்பால் ”இலங்கை ஒற்றை ஆட்சி அரசு” என்ற கட்டமைப்பை வலியுறுத்தி இந்திய – சீன அரசுகளுடன் உறவை பேணக்கூடிய அணுகுமுறைகளை வகுத்துக் கொண்டிருக்கும் மிலிந்த போன்ற இராஜதந்திரிகளை நன்கு பயன்படுத்தி வருகின்றது.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு சக்திகளுக்கு ஏற்ப அநுர அரசாங்கம் செயற்படுகிறது என்ற பின்னணியிலும், மிலிந்த போன்றோரின் ஒத்துழைப்புகளை தனிப்பட்ட முரண்பாடுகளுக்கு அப்பால் அநுர அரசாங்கம் பெறக்கூடிய வாய்ப்புகள் இல்லாமில்லை.

ஆனால், ஈழத்தமிழ் தரப்பு எதனையும் அணுகுவதற்கான ஏற்பாடுகள் எதுவும் இன்றி தமக்குள் முரண்பட்டுக் கொண்டிருப்பது ஆரோக்கியமானது அல்ல. ”காழ்ப்புணர்ச்சி அரசியல்” தமிழ்த்தேசிய கட்சிகளின் சில தலைவர்கள், சில உறுப்பினர்களிடம் இருந்து முதலில் விலக வேண்டும்.

நன்றி

Leave a Reply