ஹராரேவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மூன்றாவது டி:20 போட்டியில் கமில் மிஷாரவின் ஆட்டமிழக்காத 73 ஓட்டங்களால் இலங்கை அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் சிம்பாப்வேயை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலமாக மூன்று போட்டிகள் கொண்ட டி:20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை வெற்றி கொண்டது.
இலங்கை நேரப்படி நேற்று (07) மாலை ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு சிம்பாப்வே அணியை பணித்தது.
அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே, 20 ஓவர்கள் நிறைவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 191 ஓட்டங்களை எடுத்தது.
சிம்பாப்வே சார்பில் அதிகபடியாக விக்கெட் காப்பாளர் தடிவனாஷே மருமானி 44 பந்துகளில் 51 ஓட்டங்களை எடுத்தார்.
பின்னர் இலக்கை துரத்திய இலங்கை அணி, 14 பந்துகள் மீதமுள்ள நிலையில் இலக்கை எட்டியது.
மிஷார மற்றும் குசல் பெரேரா ஆகியோர் மூன்றாவது விக்கெட்டுக்கு 117 ஓட்டங்களை சேர்த்து ஆட்டமிழக்காத ஜோடியாக அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.
முந்தைய நான்கு டி:20 இன்னிங்ஸ்களில் வெறும் 35 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்த 24 வயதான மிஷார, தான் எதிர்கொண்ட 43 பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் ஆறு பவுண்டரிகளுடன் போட்டியை வென்ற அரைசதம் மூலம் தனது முத்திரையைப் பதித்தார்.
மிஷாரவும் அனுபவ வீரர் பெரேராவும் 7.1 ஓவர்களுக்கு இலங்கை அணி 76-2 என்ற நிலையில் இருந்த போது கூட்டணி அமைத்தனர்.
இன்னிங்ஸில் மிஷாரவைப் போலவே பெரேராவும் விறுவிறுப்பாக துடுப்பாட்டம் செய்தார்.
26 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களை எடுத்தார்.
அவரது இன்னிங்ஸில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகள் அடங்கும்.
இறுதியாக இலங்கை 17.4 ஓவர்களில் 193 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கினை கடந்தது.
போட்டியின் ஆட்டநாயகனாக கமில் மிஷார தெரிவானார்.
அதேநேரம், தொடரின் நாயகனாக துஷ்மந்த சமீர தெரிவானார்.
இலங்கை அணி சிம்பாப்வே அணிக்கு எதிரான முந்தைய ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.