அக்கரத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட டயகம–அக்கரபத்தனை கிழக்கு பிரிவு தேயிலை தொழிற்சாலை கடந்த மாதம் 12ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதனால் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் தொழிலின்றி பாரிய சிரமங்களை சந்தித்து வந்தனர்.
இந்த பிரச்சினை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து தொடர்புடைய தரப்புகளுடன் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கணக்காய்வு குழுவினரின் ஆய்வின்போது தேயிலை நிறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பாக முதற்கட்ட விசாரணைகளில் இரண்டு உயர் அதிகாரிகள் முறைகேடு செய்தது கண்டறியப்பட்டதை அடுத்து தொழிற்சாலை விசாரணை முடியும் வரை மூடப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆரம்ப பேச்சுவார்த்தையில் தோட்ட நிறுவனத்தின் தலைமை அதிகாரி கலந்து கொள்ளாததால் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.
பின்னர் ஹட்டன் உதவி தொழில் ஆனையாளர் காரியாலயத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சிரேஷ்ட்ட இயக்குனர் லோகதாஸ் அவர்களின் கோரிக்கையின்படி இம்மாதம் 09ஆம் திகதி தீர்க்கமான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஹட்டன் உதவி தொழில் ஆனையாளர் தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்கு 3 மாத கால அவகாசம் கோரிய தோட்ட நிறுவனம் முன்வைத்த வேண்டுகோளை ஜீவன் தொண்டமான் திடமாக நிராகரித்தார்.
குற்றம் செய்தது அதிகாரிகள்; தொழிலாளர்களின் வாழ்க்கையில் தண்டனையை திணிக்கக் கூடாது. எமது மக்களுக்கு உடனடி தொழில் வாய்ப்பு வழங்க தொழிற்சாலை விரைவில் திறக்கப்பட வேண்டும், என அவர் வலியுறுத்தினார்.
மேலும், விசாரணை நிறைவடையும் வரை வேறு தோட்டங்களில் பணிபுரியும் இரண்டு அதிகாரிகளை மாற்றீடாக நியமித்து தொழிற்சாலையை செயல்படுத்தலாம் எனவும் பரிந்துரைத்தார்.

நீண்டகால பேச்சுவார்த்தையின் முடிவில், எதிர்வரும் ஜனவரி மாதம் 01ஆம் திகதிக்குள் தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தயாருள்ளதாக தோட்ட நிர்வாகம் எழுத்து மூலம் ஒப்புதல் வழங்கியது.
புரிந்துணர்வு பத்திரத்தில் தோட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஹட்டன் உதவி தொழில் ஆனையாளர் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் அவர்களும் கையெழுத்திட்டனர்.
இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், அக்கரபத்தனை பெருந்தோட்ட நிறுவன தலைமை அதிகாரி அஜித் பெரேரா, தொடர்புடைய தோட்ட அதிகாரிகள், தொழில் ஆணையாளர் அதிகாரிகள் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காரியாலயக பிரதிநிதிகளும் தோட்ட மக்களும் கலந்துக்கொண்டனர்.

