மொரோக்கோ நாட்டின் பழமையான நகரங்களில் ஒன்றான பெஸிலில் நேற்று, கட்டிடங்கள் இடிந்து விழுந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் 22 ஆக உயர்ந்துள்ளதுடன் மேலும் 16 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடிபாடுகளுக்கும் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது தெரியாததால் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பெஸில் நகரில் அமைந்திருந்த இரண்டு கட்டிடங்களில் ஒரு கட்டிடம் வெறுமையாக இருந்ததாகவும், மற்றொரு கட்டிடத்தில் இஸ்லாமிய குழந்தை பிறந்ததை கொண்டாடும் நிகழ்வு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கொண்டாட்ட நிகழ்வில் 8 குடும்பங்கள் கலந்து கொண்டிருந்ததாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெஸ் நகரின் மேற்கு பகுதியில் அதிக சனத்தொகை கொண்ட அல்-முஸ்தக்பால் பகுதியில் உள்ள கட்டிடங்களில் விரிசல் ஏற்படுவதற்கான அறிகுறிகளைக் கொண்டிருந்ததாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நான்கு மாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்ததற்கான காரணத்தைக் கண்டறிய நீதித்துறை விசாரணையைத் தவிர்ந்த, தொழில்நுட்ப மற்றும் நிர்வாக விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நகரத்தில் உள்ள குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்களுக்காக அரசாங்கத் திட்டத்தின் கீழ் 2006 ஆம் ஆண்டில் இந்தக் கட்டிடங்கள் நிர்மானிக்கப்பட்டுள்ளன.
மொரோக்கோ நாடு முழுவதும் சுமார் 38,800 கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக கடந்த ஜனவரி மாதம் வீடமைப்பு அலுவல்கள் அமைச்சர் அடிப் பென் இப்ராஹிம் தெரிவித்திருந்தார்.
கடந்த 2010ஆம் ஆண்டில் மினாரெட் எனப்படும் உயரமான கோபுரம் இடிந்து விழுந்த 41 பேர் கொல்லப்பட்ட பின்னர் தற்போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.
