யாழ்ப்பாணத்தில் பாரிய அபிவிருத்தி: காரைநகர் சுற்றுவட்ட வீதிப் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் சுற்றுவட்ட வீதியைப் புனரமைக்கும் பாரிய அபிவிருத்தித் திட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளின் கீழ், நாட்டின் மறுமலர்ச்சியை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த வீதிப் புனரமைப்புத் திட்டத்திற்காக சுமார் 117.04 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், காரைநகர் மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களின் போக்குவரத்து வசதிகள் கணிசமாக மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் இ. சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்து கொண்டு திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களான க. இளங்குமரன், எஸ். ஸ்ரீபவானந்தராஜா, ஜெ. றஜீவன் ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றனர். அவர்களுடன் காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர், அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. நிகழ்வின் போது, பிரதேசத்தில் ஒழுங்கும் பாதுகாப்பும் நிலைநிறுத்தப்படுவதற்காக காவற்துறையினர் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்த வீதிப் புனரமைப்பு திட்டம் நிறைவேற்றப்பட்டால், காரைநகர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களின் நீண்டகால போக்குவரத்து சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply