ரணில் ஓர் ஒத்திகையா? நிலாந்தன்.

 

2015ல் ஆட்சி மாற்றம் நிகழ்த்த காலகட்டத்தில் ஒரு தமிழ் அரசியல் செயற்பாட்டாளர் ஸ்கண்டிநேவிய நாடு ஒன்றில் இருந்து பிரான்ஸுக்கு வந்திருந்தார்.அங்கே முன்பு இலங்கைத்தீவின் சமாதான முயற்சிகளில் ஈடுபட்ட ஸ்கண்டிநேவிய ராஜதந்திரி ஒருவரைக் கண்டு கதைத்திருக்கிறார்.”ஆட்சி மாற்றம் நடந்து விட்டது இப்பொழுது நாமல் ராஜபக்சவை தூக்கி விட்டார்கள் பொறுத்திருந்து பாருங்கள் அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் தூக்குப்படப் போகிறார்கள்” என்ற பொருள்பட அந்த ராஜதந்திரி இவருக்குச் சொன்னாராம்.

ஆனால் அந்த ராஜதந்திரி எதிர்பார்த்ததுபோல அல்லது மேற்கு நாடுகள் எதிர்பார்த்ததுபோல ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய எல்லாரையுமே தூக்கவில்லை. நாமலைக்கூட கனகாலம் சிறையில் வைத்திருக்கவில்லை. ராஜபக்சக்களை ரணில் பாதுகாத்தது இதுதான் முதல் தடவை அல்ல. அதுபோல ராஜபக்சக்களும் ரணிலைப் பாதுகாத்த சந்தர்ப்பங்கள் உண்டு. சிங்கள உயர் குழாமானது ஆட்சியைப் பிடிப்பதற்காக அரசியலில் பகைவர்போல நடந்து கொள்ளும். ஆனால் ஆபத்து என்று வரும் பொழுது ஒரு உயர் குழாத்தினர் இன்னொரு உயர் குழாத்தினரைப் பாதுகாத்து, ஒரே வர்க்கமாக ஒன்று திரண்டு விடுவார்கள்.நல்லாட்சி அரசாங்கத்தின் போது இதுதான் நடந்தது.

ஆனால் இப்பொழுது ரணில் கைது செய்யப்பட்டிருக்கிறார். சிங்கள உயர் குழாத்தைப் பிரதிபலிக்காத அனுரகுமார ஜனாதிபதியாக இருக்கும் ஒரு காலத்தில் இலங்கைத் தீவில் நவீன வரலாற்றில் ஒரு முன்னாள் ஜனாதிபதி முதன்முதலாகக் கைது செய்யப்பட்டு இருக்கிறார். “தம்புத்தேகமவில் இருத்து வந்த நாட்டுக்காட்டான் கொழும்பு செவின் ரோயல் மனிதனை சிறைக்கு அனுப்பித் தவறிழைத்ததாகவும் அதற்கான தக்க பதிலை வெகு சீக்கிரத்தில் பெறுவார் என்றும்’ கூறுகின்றார்கள்” என்று இஷார.எம்.ஜெயசேன எழுதியுள்ளார்.

ரணில் கைது செய்யப்பட்டது பெரும்பாலான எதிர்க்கட்சி பிரமுகர்கள் அவரைச் சென்று பார்த்தார்கள். அவருடைய கட்சியில் இருந்து உடைத்துக் கொண்டு வெளியேறிய சஜித்தும் போய்ப் பார்த்தார். தமிழ் சிங்கள அரசியல்வாதிகளும் அவரோடு நின்றார்கள். சிங்கள உயர் குழாம் தங்களில் ஒருவருக்கு ஆபத்து என்றதும் ஒன்று சேரக் காண்கிறோம். “ரணிலுக்கு ஆதரவு வழங்க நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்திருந்த நாமல், மைத்த்ரீ ரிஷாட், ஜீவன், ட்விட்டரில் ஆதரவு வழங்கிய சஜித், பாராளுமன்றத்தில் “little courtesy” கேட்ட ஹக்கீம், வெள்ளிக்கிழமை கைது செய்ததை “ill-advised” என்ற சுமந்திரன் உட்பட அனைவரும் காட்ட முயன்றது இந்த சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் ஒன்று என்பதைத்தான்.”என்று இஷார.எம்.ஜெயசேன மேலும் கூறுகிறார்.

அனுர,ரணிலைக் கைது செய்ததன்மூலம் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்திருக்கிறாரா அல்லது எதிர்க்கட்சிகளை உஷாரடைய வைத்திருக்கிறாரா ?

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது இதுவரையிலும் 63 பேர்களை ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்திருக்கிறது.அந்த 63 பேர்களுக்குள்ளும் அரசியல்வாதிகள்.உயர் அதிகாரிகள்,படைத்துறையைச் சேர்ந்தவர்கள் போன்ற அனைவரும் அடங்குவர். இவ்வாறான கைது நடவடிக்கைகளின் மூலம் தேசிய மக்கள் சக்திக்கு எதிரான அரசியல்வாதிகளும் மேட்டுக்குடியினரும் படைப்பிரதானிகளும் ஒன்று திரளப் போகிறார்கள். அதாவது சிறீலங்காவை இதுவரை காலமும் ஆண்டு வந்த மேட்டுக்குடியினர் -பவர் எலீற்ஸ்- இனி ஒன்றுதிரளுவார்கள். இதனால் தேசிய மக்கள் சக்திக்கு எதிரான சவால்கள் மேலும் அதிகரிக்கும்.

அதேசமயம் தமிழ் நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் இந்தக் கைது நடவடிக்கை ஐநாவிலும் உலகப்பொது மன்றங்களிலும் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்?

ரணில் கைது செய்யப்பட்டிருக்கும் நேரம் எது என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.அடுத்த ஜெனிவா கூட்டத்தினருக்கு நாடு தயாராகிக் கொண்டிருக்கும் ஒரு பின்னணியில் ரணில் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஏற்கனவே ஒரு கடற்படைப் பிரதானியும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவை யாவும் இலங்கைத் தீவின் நீதி பாரபட்சமற்றது, நம்பகத்தன்மை மிக்கது என்ற ஒரு தோற்றத்தைக் கட்டி எழுப்புவதற்கு அரசாங்கத்திற்கு உதவக்கூடும். ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் உள்நாட்டு நீதியை வெளிநாட்டு உதவிகளின் மூலம் பலப்படுத்த வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருக்கும் ஓர் அனைத்துலக பின்னணியில், இலங்கைத் தீவின் உள்நாட்டு நீதி பரிபாலனக் கட்டமைப்பின் நம்பகத்தன்மையை உயர்த்துவதற்கு இந்தக் கைது அனுராவுக்கு உதவும்.

கைது செய்யப்பட்டிருப்பவர் யார் என்று பார்த்தால், பெரும்பாலான மேற்கு நாடுகளின் செல்ல பிள்ளை. சிங்கள பௌத்த ஆட்சியாளர்கள் மத்தியில் ஒரு லிபரலாகப் பார்க்கப்படுகிறவர். தமிழ் மக்கள் அவரை நரி என்று கூறலாம். அல்லது லிபரல் முகமூடி அணிந்த இனவாதி என்றும் கூறலாம்.ஆனால் மேற்கு நாடுகள் அவரை லிபரல் என்றுதான் கருதுகின்றன.மேற்கு நாடுகளுக்கு அதிகம் விருப்பமான ஒரு தலைவர் அவர்.நவீன ஸ்ரீலங்காவில் இதுவரை ஸ்ரீலங்காவை ஆண்ட சிங்களபௌத்த கட்சிகளைச் சேர்ந்த அநேகமானவர்கள் சிங்கள பௌத்த பாரம்பரிய உடைகளுடன்தான் காணப்படுவார்கள்.ஆனால் ரணில் விக்ரமசிங்க என்றைக்குமே அவ்வாறு வேட்டியும் நஷனலுமாக காணப்பட்டதில்லை. அவர் எப்பொழுதுமே மேற்கத்திய உடுப்புகளோடுதான் காணப்படுவார் . அந்த அளவுக்கு அவர் மேற்கத்தியப் பண்பாட்டின் வாரிசு.

அது மட்டுமல்ல, ஐநா மனித உரிமைகள் பேரவையில் முதன் முதலாக 2015 ஆம் ஆண்டு,செப்டம்பர் மாதம்,இலங்கை அரசாங்கம் ஐநாவின் தீர்மானம் ஒன்றுக்கு இணை அனுசரணை வழங்கியது.அது ரணில் ஆட்சியில் இருந்தபடியால்தான் நடந்தது.எனவே ஐநாவைப் பொறுத்தவரையிலும்கூட ரணில் விருப்பத்துக்குரிய ஒரு தலைவர்.இலங்கைத் தீவில் நிலைமாறு கால நீதிக்கான ஐநாவின் தீர்மானத்தை நிறைவேற்றிய பெற்றோரில் ரணிலும் ஒருவர். ஆனால் அவர், தான் பெற்ற பிள்ளைக்கு உண்மையாக இருக்கவில்லை.அதனால் தான் 2018 ஆம் ஆண்டு சுமந்திரன் கூறுவதுபோல அது ஒரு தோல்வியுற்ற பரிசோதனையாக முடிவடைந்தது.ஆனாலும் ஐநா போன்ற அனைத்துலக நிறுவனங்களைப் பொறுத்தவரை ரணில் கெட்டிக்காரர்;சந்திரசாலி;எல்லாப் பேரரசுகளிலும் சம தூரத்தில் வைக்கக் கூடியவர்.என்றாலும் செல்லப் பிள்ளை.

இப்படி மேற்கத்திய நாடுகளின் விருப்பத்துக்குரிய ஒரு தலைவராகக் காணப்படும் ஒருவரை ஒருவரை அனுர தூக்கியிருக்கிறார். இதன்மூலம் மேற்கு நாடுகளுக்கும் ஐநாவுக்கும் அவர் எதைச் சொல்ல முற்படுகிறார்?

இந்த இடத்தில் ராஜபக்சக்களைத் தூக்கி இருந்தால் என்ன நடந்திருக்கும்? உள்நாட்டில் அவர்களுடைய ஆதரவாளர்கள் கொதித்து எழுந்திருப்பார்கள். ஆனால் அணிலுக்காக அவருடைய ஆதரவாளர்கள் அந்த அளவுக்குக் கொதித்து எழவில்லை.மகிந்த குடும்பத்தவர்களைத் தூக்கினால் உள்நாட்டில் குழப்பம் ஏற்படலாம்.ஆனால் ரணிலைத் தூக்கினால் ஒப்பீட்டளவில் குறைந்த குழப்பமே ஏற்படும் என்று நன்கு கணித்து ரணில் தூக்கப்பட்டிருக்கிறார். இவ்வாறு மேற்கத்திய ராஜதந்திரிகள் மத்தியிலும் ஐநா போன்ற உலகப் பொது நிறுவனங்கள் மத்தியிலும் மதிக்கப்படுகின்ற ஒரு தலைவரைத் தூக்கி அதன் மூலம் இலங்கைத் தீவின் உள்நாட்டு நீதிப் பொறிமுறையின் நம்பகத்தன்மையை நிரூபிப்பதற்கு அனுர அரசாங்கம் முயற்சிக்கின்றதா?

இதில் ஒரு வர்க்கப் பரிமாணம் உண்டு. அதேசமயம் இருவருமே “அரகலய”வின் விளைவுகள்தான். அரகலயவின் முதல் கனிகளைப் புசித்தவர் ரணில். அரகலயவின் விளைவாக ராஜபக்சக்கள் ஓடி ஒழிய வேண்டி வந்தபொழுது அவர்கள் ரணிலை ஒரு கவசமாக முன்னே நிறுத்தினார்கள்.ரணிலும் தனது வர்க்கத்தைப் பாதுகாத்து,அரகலயவை நசக்கினார்.அதேசமயம் அதன் விளைவாக ஜனாதிபதியாக வந்தார்.

அதன்பின் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்.ஆனால் அரகலயவின் கனிகளை தேர்தல் மொழியில் நன்கு மொழி பெயர்த்த ஜேவிபி அரகலயவின் அடுத்த கட்டக் கனிகளை தனக்காக்கிக் கொண்டது. இப்பொழுது அரகலயவை நசுக்கிய ஒருவரை,தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை “எல் போர்ட் அரசாங்கம்” என்று இகழ்ந்த ஒருவரைத் தூக்கியதன் மூலம் ஜேவிபி தன்னுடைய கணக்கு ஒன்றைத் தீர்த்திருக்கிறது.

சிங்கள மக்களைப் பொறுத்தவரை இது மாற்றம்தான். சந்தேகமே இல்லை. அனுர இந்த விடயத்தில் ரிஸ்க் எடுக்கிறார் என்பது உண்மை. இதன் விளைவாக ஒன்று திரளப் போகும் சிங்கள பவர் எலீட்ஸ்-சக்தி மிக்க உயர் குழாம் அனுர வைச் சூழ்ந்து நின்று தாக்கும். அதைத் தேசிய மக்கள் சக்தி எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம்.சிலவேளை தொடர்ச்சியாக இதுபோன்ற கைது நடவடிக்கைகளின்மூலம் அனுர தன்னைப் பலப்படுத்திக் கொள்ளவும் கூடும். அல்லது கவிழவும் கூடும்.

நன்றி

Leave a Reply