ரணில் செய்த அனைத்தையும் அநுர தொடர்ந்து கொண்டிருக்கின்றார்! -முஜிபுர் ரஹ்மான்

மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கச் சென்றதைத் தவிர ரணில் செய்த அனைத்தையும் அநுர தொடர்ந்து கொண்டிருக்கின்றார்” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்  முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்துக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் பொது மக்களால் முன்னெடுக்கப்பட்டது. இந்த திட்டத்தினால் சுற்றுச்சூழலுக்கும், பறவைகளுக்கும் பாரிய பாதிப்புக்கள் ஏற்படும் என சூழலியலாளர்கள் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால் அரசாங்கம் மக்களின் போராட்டங்களுக்கோ, சூழலியலாளர்களின் கருத்துக்களுக்கோ முக்கியத்துவமளிக்காமல்
அவற்றை உதாசீனப்படுத்துகிறது. இவற்றுக்கு பதிலளிப்பதற்கு ஆளுந்தரப்பில் எவரும் முன்னுரிமையளிக்கவுமில்லை.
குறைந்தபட்சம் இதனுடன் தொடர்புடைய அதிகாரிகள் கூட இதற்கு பதிலளிக்கவில்லை.

இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படும் போது சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசித்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆனால் அரசாங்கத்திடமிருந்து இதுவரையில் இந்த கேள்விகளுக்கு பதில் எதுவும் கிடைக்கவில்லை.
மாறாக கலகம் அடக்கும் பிரிவினரை அனுப்பி அவர்களை தாக்குவதே அரசாங்கத்தின் பதிலாகவுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கச் சென்றதைத் தவிர ரணில் செய்த அனைத்தையும் அநுர தொடர்ந்து கொண்டிருக்கின்றார்.
எதிர்க்கட்சிகள் மாத்திரமின்றி தமது உரிமைகளுக்காக போராடும் மக்கள் மீதும் அடக்குமுறை பிரயோகிக்கப்படுகிறது.
இவ்வாறான வழிமுறைகளை கைவிட்டு மக்களுடன் சுமூகமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து
பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

நன்றி

Leave a Reply