ரணில் – மைத்திரி அரசாங்க ஆதரவும் ஹர்த்தாலும் – Oruvan.com

இராணுவ எண்ணிக்கையை குறைக்க ரணில் திட்டமிட்டார். ஆனால்?

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகள் என்ன?

அ.நிக்ஸன்-

2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னரான சூழலில், வடக்கு கிழக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாக போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால் 2009 இற்கு முன்னரான முப்பது வருட ஆயுதப் போராட்டம் ஒட்டுமொத்த இன விடுதலை என்ற அடிப்படையில் நடந்தது.

ஆயுதப் போராட்டத்துக்கு முன்னரான முப்பது வருடங்கள் அதாவது 1950 களில் இருந்து அஹிம்சை வழியில் நடந்தன. அது சட்ட மறுப்பு போராட்டமாகவே இருந்தது.

இலங்கை ஒற்றை ஆட்சி அரசியல் யாப்புச் சட்டங்களை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்பதை மையப்படுத்தியே தமிழ்த் தேசியம் என்ற கோட்பாடு எழுந்தது.

ஆனால் 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தால் தான், ஈழத்தமிழர் விவகாரத்தை சர்வதேச அரங்கில் பேச முடியும் என்ற புதிய கற்பிதம் ஒன்றை சில தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் முன்வைத்தன..

இக் கற்பிதம் வேடிக்கையானது என்ற பின்னணியில், 15 ஆம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தால் போராட்டத்தை எப்படி நோக்குவது?

தேர்தலில் தத்தமது கட்சிகளின் ஆசனங்களை அதிகரிப்பது என்ற ஒரேயொரு இலக்கைத் தவிர, வேறு அரசியல் உத்திகள் – இராஜதந்திரம் எந்த ஒரு அரசியல் கட்சியிடமாவது இருந்ததா?

ஆகக் குறைந்த பட்சம் வடக்கு கிழக்கில் இராணுவ எண்ணிக்கையை குறைப்பதற்கு நிதி வழங்கும் நாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இலங்கைக்கு பரிந்துரைத்திருந்தன.

ஆனால் இப் பரிந்துரைகள் கூட உரியமுறையில் இலங்கை அரசாங்கம் செயற்படுத்த விரும்பவில்லை என்று ஏதாவது ஒரு தமிழ்க் கட்சி பிடிவாதமாக நின்று அழுத்தம் கொடுத்தா?

இலங்கையில் இராணுவ எண்ணிக்கையை குறைப்பதற்கு அப்போது ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

இராணுவத்துக்கான ஓய்வூதியத் திட்டம் ஒன்றையும் ரணில் முன்மொழிந்திருந்தாக எகனாமி நெக்ஸ்ட் (EconomyNext) என்ற சஞ்சிகை 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரசுரித்திருந்த கட்டுரை ஒன்றில் கூறியிருந்தது.

இக் கட்டுரையை மேற்கோள் காண்பித்து த டிப்ளோமற் (thediplomat) என்ற ஆங்கில செய்தித் தளத்தில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்த ரதீந்திர குருவிற்ற (Rathindra Kuruwita) என்ற சிங்களப் பத்திரிகையாளர், சர்வதேச நாணய நிதியத்தை மகிழ்விக்க, ரணில் இராணுவ எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக எழுதியிருந்தார்.

சர்வதேச நாணய நிதியம் வழங்கிய பல பரிந்துரைகளின் பிரகாரமே இராணுச் வெலவினங்களை குறைப்பது போன்ற ஒரு ஏற்பாட்டை ரணில் அப்போது ஒப்பாசாரத்துக்கு செய்திருக்கிறார் என்பது பகிரங்கமானது.

அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஜேபிவியும் இராணுவ எண்ணிக்கை குறைப்பு முன்மொழிவுக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் சில பரிந்துரைகளின் பிரகாரம் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். ஆனால் இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்க அனுமதிக்க முடியாது என ஜேவிபி தேர்தல் பிரச்சாரங்களிலும் சொல்லியிருந்தது.

எவ்வாறாயினும் வடக்குக் கிழக்கில் இதுவரை இராணுவ எண்ணிக்கை குறைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

அதேநேரம் வடக்கு கிழக்கு இராணுவ முகாம்கள் பற்றிய விடயங்களைத் தவிர வேறு பரிந்துரைகளுக்கு செவிசாய்க்க முடியும் என்ற தொனியில் கோட்டபாபய ஜனாதிபதியாக இருந்தபோது சர்வதேச நாணய நிதியத்திடம் அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டிருந்தது.

ஆகவே இப் பின்னணியில் தற்போது தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் அரசாங்கத்தை அமைந்துள்ள ஜேவிபியிடம் இராணுவத்தை குறைக்கும் திட்டம் இருப்பதாக கூற முடியாது.

ஆனாலும் மீள் நல்லிணக்கம் என சர்வதேச நாணய நிதியம் அடிக்கடி ஞாபகப்படுத்தி வரும் மொழியின் உள்ளடக்கத்தின் பிரகாரம், வடக்கு கிழக்கில் இராணுவ எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். இராணுவ முகாம்கள் பலவற்றையும் மூட வேண்டும்.

ஆனால் இதற்கு அநுர அரசாங்கம் மாத்திரமல்ல வேறு எந்தவொரு சிங்கள அரசியல் தலைவர்களும் உட்படுவார்கள் என்று கூறுவதற்கு இல்லை.

எவ்வாறாயினும் உள்ளகத் தகவல்களின் பிரகாரம் .இராணுவ எண்ணிக்கைகள் குறைக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் அநுர அரசாங்கத்திடம் பரிந்துரைத்துள்ளது என அறிய முடிகிறது.

இதனை அறிந்துதான் ஹர்த்தால் ஏற்பாட்டை சுமந்திரன் செய்திருக்கக் கூடும்… சிவேளை இராணுவ எண்ணிக்கை குறைக்கப்பட்டால், தமது போராட்டமே காரணம் என காணிப்பித்து வாக்குகளை பெறும் நோக்கமே அது.

ஆனால் இராணுவ எண்ணிக்கை குறைப்பிற்கு அநுர அரசாங்கம் தயாராக இல்லை என்பதை அணுகுமுறைகள் காண்பிக்கிறன.

குறைந்தபட்சம் இராணுவத்துக்கு ஓய்வூதியம் வழங்கி பணியில் இருந்து நிறுத்த ரணில் முன்மொழிந்த திட்டம் பற்றிக் கூட அநுர அரசாங்கம் பரிசீலிக்க விரும்பவில்லை என்று தெரிகிறது.

இப் பின்புலத்தோடு, 2015 ஆம் ஆண்டு ரணில் – மைத்திரி அரசாங்கத்துக்கு ழுமு ஒத்துழைப்புக் கொடுத்து ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து இலங்கையை பிணை எடுத்தது சம்மந்தன் தலைமையிலான அப்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதை ஞாபகப்படுத்த வேண்டும்.

இந்த ஞாபகப்படுத்தின் பிரகாரம், முல்லைத்தீவு இராணுவ முகமுக்குச் சென்ற இளைஞர்கள் தாக்கப்பட்டு ஒருவர் மரணித்தமைக்கு பொறுப்புச் சொல்ல வேண்டியது யார்?

தமிழரசுக் கட்சி மாத்திரமல்ல. ஈபிஆர்எல்எப், புளொட், ரேலோ ஆகிய கட்சிகளும் பொறுப்புச் சொல்ல வேண்டும். தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் தற்போது வேறு அரசியல் அணியாக இருந்தாலும் பொறுப்புச் சொல்லித்தான் ஆக வேண்டும்.

ஆகவே ஹர்த்தால் நடத்தி சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபடாமல், இராணுவ எண்ணிக்கையை குறைக்க வேண்டிய அவசியம் தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேசி தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.

ஏனெனில் பரிந்துரை அவர்களுடையதுதான்.

அத்துடன், ஜெனிவா மனித உரிமை சபைக்கு எழுத்து மூலம் உடனடியாகவும் கூட்டாகவும் அறிவிக்கவும் வேண்டும்.

வெறுமனே இது இன அழிப்பு என்று தமிழ் ஊடகங்களுக்கு மாத்திரம் போலியாகக் கருத்துச் சொல்லி, வாக்கு வாங்கிகளை அதிகரிக்கும் வியூகங்களை தவிர்க்க வேண்டும்.

சர்வதேசச் சட்டங்கள், புவிசார் அரசியல் தன்மைகளை அறிந்து அதன் ஊடக காய் நகர்த்தும் இராஜதந்திர அரசியல், 2009 இற்குப் பின்னர் தமிழ்த் தரப்பிடம் இல்லை என்ற முடிவுக்குத்தான் வர வேண்டும்.

இதனாலேயே, வடக்கு கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு, சிங்கள குடியேற்றம் என்பதன் ஊடாக தமிழ் இன மரபு அடையாள அழிப்பு நடவடிக்கைகள் வெவ்வேறு வடிவங்களில் அரங்கேறுவதற்கு காரண – காரியமாகின்றன.

நன்றி

Leave a Reply