ரஷ்யாவின் தூர கிழக்கு கம்சட்கா பகுதியில் ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டதாக பிராந்திய ஆளுநர் வெள்ளிக்கிழமை (19) தெரிவித்தார்.
இதனால் அப்பகுதியில் தொடர்ச்சியான சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
சுனாமி அலைகள் கரையை அடைந்த போதிலும், சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிலநடுக்கம் 7.8 ரிக்டர் அளவிலும் 10 கிமீ (6.2 மைல்) ஆழத்திலும் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதைத் தொடர்ந்து 5.8 ரிக்டர் அளவிலான தொடர் அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 7.2 ரிக்டர் அளவில் பதிவானதாக ரஷ்யாவின் அவசரகால அமைச்சு தெரிவித்துள்ளது.
அனைத்து அவசர சேவைகளும் உயர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் விளாடிமிர் சோலோடோவ் தெரிவித்தார், ஆனால் எந்த சேதமும் ஏற்படவில்லை.
பெரிங் கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலை நோக்கி நீண்டு செல்லும் தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தீபகற்பத்தின் கடற்கரையில் பல்வேறு இடங்களில் 30 முதல் 62 சென்டிமீட்டர் (1 முதல் 2 அடி) வரை சுனாமி அலைகள் எழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜப்பானின் வடக்கே உள்ள குரில் தீவுத் தொடரின் சில பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவசரகால அமைச்சு தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்க தேசிய வானிலை சேவை மற்றும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அலாஸ்காவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டன.
ஆனால் பின்னர் எச்சரிக்கை நீக்கப்பட்டது.
கம்சட்கா அதிக நில அதிர்வு பகுதியில் அமைந்துள்ளது.
கடந்த வாரத்தில் 7க்கும் அதிகமான ரிக்டர் அளவிலான குறைந்தது இரண்டு நிலநடுக்கங்கள் அங்கு ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.