இந்தியாவில் உள்ள சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதற்கான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பிரையன் ஃபிட்ஸ்பாட்ரிக் கூறியுள்ளார்.
அமெரிக்க கொள்கை ரீதியான தலைமை மற்றும் உயர் மட்ட இராஜதந்திர ஈடுபாடுகள் காரணமாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளத்திற்கு அண்மையில் விஜயம் செய்த பின்னர் ஃபிட்ஸ்பாட்ரிக்கின் இந்த அறிக்கை வந்துள்ளது.
இந்தியாவின் ரஷ்ய மசகு எண்ணெய் இறக்குமதி செப்டம்பர் மாதத்தில் அதிகரிக்கும் என்று ரொய்ட்டர்ஸ் அறிக்கை கூறிய சில நாட்களுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் ரோஸ்நெஃப்ட் ஆதரவு பெற்ற நயாரா எனர்ஜி ஆகியவை ரஷ்ய எண்ணெய் கொள்முதலை 10-20% அல்லது ஒரு நாளைக்கு 150,000-300,000 பீப்பாய்கள் அதிகரிக்கும் என்று ரொய்ட்டர்ஸ் அறிக்கை கூறியிருந்தது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் அண்மையில் சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் போது சந்தித்தனர்.
அங்கு இரு தலைவர்களும் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இந்திய இறக்குமதிகள் மீதான 50% வரிகள் ஆகஸ்ட் 27 முதல் அமுலுக்கு வந்துள்ளன.
இந்த வரிகளில் பாதி ரஷ்யாவுடனான இந்தியாவின் எண்ணெய் வர்த்தகத்தின் மீது விதிக்கப்பட்டது.
இது உக்ரேனில் போருக்கு மறைமுகமாக நிதியளிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
50% வரிகள் தொடர்பாக இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தக பதட்டங்களை சந்தித்து வருகின்றன.
ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் பலர் புது டெல்லியை கடுமையாக சாடி வருகின்றனர்.
எனினும், சந்தைகளில் உள்ள சலுகைகள் மற்றும் உலகளாவிய சூழ்நிலை அதன் எரிசக்தி ஒப்பந்தங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்று இந்தியா தெளிவுபடுத்தியிருந்தது.