சென்னை மாநகராட்சி ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் தூய்மைப் பணி மீண்டும் தொடங்கியது.
சென்னை மாநகராட்சியில், ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் தூய்மைப் பணி தனியாரிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தூய்மைப் பணி மாநகராட்சி வசமே தொடர வேண்டும், தானியாரிடம் வழங்கக் கூடாது என வலியுறுத்தி, தூய்மைப் பணியாளர்கள் 9-வது நாளாக நேற்றும் ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் இரவு அமைச்சர் பி.கே.சேகர் பாபு தலைமையிலும், நேற்று காலை ஆணையர் தலைமையிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் சார்பில், என்யூஎல்எம் முறையில் பணி வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தூய்மைப் பணியை தனியாரிடம் வழங்கக் கூடாது ஆகிய 3 கோரிக்கையை வலியுறுத்தினர். இதை அரசுத் தரப்பு ஏற்காததால், 9-வது நாளாக போராட்டத்தை தொடர்வதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இரு மண்டலங்களிலும் நேற்று தூய்மைப் பணி மீண்டும் தொடங்கியது. இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சி, திடக்கழிவு மேலாண்மை துறை பணிகள், 2020-ம் ஆண்டு முதல், 15 மண்டலங்களில், 10 மண்டலங்கள் மற்றும் அம்பத்தூர் மண்டலத்தில் உள்ள 3 வார்டுகளும் தனியார் நிறுவனங்களின் வழியே செயல்பட தொடங்கின.
இதனுடன் சேர்த்து, தற்போது ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த தூய்மைப் பணிகள் ராம்கி நிறுவனத்துக்கு ஒப்படைக்கப்பட்டு, கடந்த ஜூலை 21 முதல் அந்நிறுவனம் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆக.1 முதல் ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில் சுயஉதவிக் குழுக்கள் மூலம் பணிபுரிந்து வந்த தற்காலிக தூய்மைப் பணியாளர்கள், ராம்கி நிறுவனத்தில் பணியில் சேராமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ராம்கி நிறுவன ஒப்பந்தப்படி, மொத்தம் 3,809 தூய்மைப் பணியாளர்கள் பணியில் நியமிக்க வேண்டும். தற்போது வரை, 1,770 பணியாளர்களை ராம்கி நிறுவனம் பணி அமர்த்தியுள்ளது. இது நாள் வரை பணிபுரிந்து வந்த சுயஉதவிக் குழுக்களின் தற்காலிக தூய்மைப் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க மாநகராட்சியால் போதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, ராம்கி நிறுவனத்தில் மீதமுள்ள 2.039 பணியாளர் இடங்கள், இரு மண்டலங்களிலும் ஏற்கனவே பணிபுரிந்த தற்காலிக தூய்மைப் பணியாளர்களுக்காக ராம்கி நிறுவனத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று, தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் ராம்கி நிறுவனத்தில் தங்களுடைய விருப்ப கடிதத்தை கொடுத்து பணியில் சேர்ந்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.