ரூ.94,000-ஐ கடந்து தங்கம் விலை புதிய உச்சம்: பவுனுக்கு ரூ.1,960 உயர்வு | gold price hits new high sovereign increased by 1960 rupees

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.14) பவுனுக்கு ரூ.1,960 உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவது அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிர்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.

ஒரு பவுன் ஆபரணத் தங்கம் அக்.7-ம் தேதி ரூ.90,400 ஆக உயர்ந்தது. இதன்பிறகு. ஓரிரு நாட்கள் இறக்கமாகவும், பெரும்பாலான நாட்கள் ஏற்றமாகவும் இருந்து வந்த நிலையில், அக்.8-ம் தேதி பவுன் ரூ.91 ஆயிரத்தையும், அக்.11-ம் தேதி ரூ92 ஆயிரத்தையும் தாண்டி, அடுத்தடுத்து வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது.

இதன் தொடர்ச்சியாக, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.640 உயர்ந்து. ரூ.92,640-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் 22 கார்ட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.245 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,825-க்கு விற்பனை ஆகிறது. பவுனுக்கு ரூ.1,960 உயர்ந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.94,600-க்கு விற்பனை ஆகிறது. இதேபோல 24 காரட் தங்கம் ரூ.1,03,200-க்கு விற்பனை ஆகிறது.

இதுபோல, வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்தது. தொழில் துறையில் வெள்ளி தேவை அதிகரிப்பால், அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.206 ஆகவும், கட்டி கிலோவுக்கு ரூ.9,000 உயர்ந்து, ரூ.2,06,000-க்கு விற்பனை ஆகிறது.

நன்றி

Leave a Reply