ரேக்ளா போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற காங்கயம் காளை ரூ.30 லட்சத்துக்கு விற்பனை! | most successful in rekla race Kangayam bull sold for rs 30 lakhs

உடுமலை: உடுமலை அருகே 25 போட்டிகளில் வெற்றி வாகை சூடிய காங்கயம் இனக் காளை ரூ.30 லட்சத்துக்கு விற்பனையாகி உள்ளது. உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள விவசாயிகள், ரேக்ளா பந்தயத்துக்காக அதிகளவில் காங்கயம் இன காளைகளை வளர்த்து வருகின்றனர். அந்த வகையில் உடுமலை அருகே உள்ள மருள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஹரி வீரராகவன் என்பவர் காங்கயம் இன காளைகள் வளர்த்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள நெகமம் செட்டிக்காபாளையத்தில் நடந்த ரேக்ளா பந்தயத்தில் இவரது 3 வயது காங்கயம் மயிலை காளை குறைந்த நேரத்தில் இலக்கை கடந்து முதல் பரிசு வென்றது. இந்த காளையை உச்சபட்சமாக ரூ.30 லட்சத்துக்கு ஹரி வீரராகவன் விற்பனை செய்துள்ளார்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரேக்ளா பந்தயக் காளை அதிகபட்சமாக ரூ.22 லட்சத்துக்கு விற்பனையானது. இதுவரை அந்த காளையே அதிக விலைக்கு விற்பனையானதாக கருதப்பட்டது. தற்போது, ஹரி வீரராகவன் வளர்த்த காளை ரூ.30 லட்சத்துக்கு விற்பனையாகி உள்ளது. இது தற்போது அதிகபட்ச விலையாக கருதப்படுகிறது.

நாட்டு மாடுகளை காக்க வேண்டும் என்ற நோக்கில் காங்கயம் இன காளை மாடுகள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறோம். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரேக்ளா பந்தயங்களிலும் பங்கேற்று வருகிறோம். நெகமம், செட்டிக்காபாளையம் பகுதியில் நடந்த மாநில அளவிலான ரேக்ளா பந்தயத்தில் மயிலை காளை 200 மீட்டர் பந்தய தூரத்தை 16 விநாடிகளில் கடந்து அபார வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றது.

இதனாலேயே இந்தகாளை தற்போது அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது. மூன்று வயதான காளை இதுவரை 25-க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது, என்றனர்.

நன்றி

Leave a Reply