லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சூக், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் இதே கருத்தை வலியுறுத்தி, காலநிலை ஆர்வலரும், கல்வியாளருமான சோனம் வாங்சூக், கடந்த 10 ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த நிலையில் இதற்கு ஆதரவாக, லடாக் முழுதும் கடந்த 24ஆம் திகதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் வன்முறையாக மாறிய இந்த போராட்டத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டதுடன் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து, தன் உண்ணாவிரதப் போராட்டத்தை வாங்சூக் முடித்துக் கொண்டதுடன் போராட்டக்காரர்களைத் துாண்டியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, வாங்சூக் கைதுக்கு ஜம்மு – காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.