வஞ்சிக்கப்பட்ட அரசியல் ஆளுமை செ.இராசதுரை – து.கௌரீஸ்வரன்

வஞ்சிக்கப்பட்ட அரசியல் ஆளுமை செ.இராசதுரை

====================================================================================

இலங்கைத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் கிழக்கிலிருந்து பிரகாசித்த ஒரு மூத்த அரசியல்வாதியான திரு செ.இராசதுரை அவர்கள் 07.12.2025 ஆந் தேதி தமிழகத்தின் சென்னையில் இயற்கையடைந்தார் என்ற செய்தி இலங்கையில் அரசியல் பிரக்ஞையுடன் வாழ்வோரின் கவனத்தைப் பெறுவதாக இருக்கிறது.

நாம் பிறந்து வாழும் மட்டக்களப்புத் தேர்தல் தொகுதியில் நமது மூத்த தலைமுறைகளின் ஆதரவையும், அன்பையும் பெற்ற ஓர் அரசியல் தலைவனுக்கு நமது ஆழ்ந்த அஞ்சலிகளைத் தெரிவிப்பதோடு இக்குறிப்பையும் பதிவாக்க விரும்புகிறோம்.

இலங்கைத் தமிழ்த் தேசியவாதத்தையும், இலங்கையின் மிதவாதத் தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றையும் கற்றறிவதில் ஆர்வங் கொண்ட மாணவர்கள் கவனஞ்செலுத்த வேண்டிய ஓர் அரசியல் ஆளுமையாக, முன்னாள் மட்டக்களப்புத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த செல்லையா இராசதுரை அவர்கள் காணப்படுகின்றார் எனலாம்.

இலங்கைத் தமிழ்த் தேசியவாத அரசியல் செல்நெறியில் தீவிரவாதச் செயற்பாடுகளுக்கு முன்னும், பின்னுமான அரசியல் நடவடிக்கைகளை மதிப்பிடுவதற்கு திரு செ.இராசதுரை பற்றிய கற்கை மிகவும் இன்றியமையாததாக இருந்து வருகின்றது.

வடக்கு இலங்கையிலிருந்து வித்தியாசங்கள் மிகுந்த கிழக்கிலங்கையில் குறிப்பாக மட்டக்களப்பில் பிரதிநிதித்துவ சனநாயக அரசியலுக்கேயுரிய தன்மைகளுடன் தமிழ்த் தேசியவாத அரசியலை வேரூன்றச் செய்வதில் மிகுந்த பங்களிப்பை நல்கிய முழுநேர அரசியல்வாதியாக சுமார் மூன்று தசாப்த காலமாகத் திரு செ.இராசதுரை அவர்கள் செயலாற்றியுள்ளார்.

இவருக்குப் பின்னர் மிதவாத அரசியலைச் செய்யவல்ல அடுத்த தலைமுறையைச் சேர்ந்த முழுநேர அரசியல்வாதிகளை இவருடைய அரசியல் நடவடிக்கைகள் மட்டக்களப்பில் உருவாக்கியிருந்ததைப் பற்றியும் அறிய முடிகின்றது.

மட்டக்களப்புத் தேர்தல் தொகுதிக்குள் வாழ்ந்த பல்லின, பல்சமூகத் தன்மைகளையும், பல்பண்பாடுகளையும் நன்கு உள்ளார்ந்து ஆய்ந்தறிந்து அதற்குத் தகுந்த வகையில் தனது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்த ஒரு பிரபுத்துவ அரசியல் ஆளுமையாக அவர் இயங்கியுள்ளார்.

இதனால் மூன்று தசாப்த காலம் தொடர்ச்சியாக மட்டக்களப்புத் தொகுதியின் முதலாவது பிரதிநிதியாக இவர் நாடாளுமன்றம் சென்றிருக்கிறார்.

அப்போதைய தமிழ்த் தேசிய அரசியலில் ஒரு பிராந்தியத் தலைவராக இவர் மேற்கிளம்பித் தெரிந்துள்ளார்.

இவ்வாறு, சரி பிழைகளுக்கு அப்பால் ‘தமிழ்த் தேசியம்’ எனும் குடையின் கீழ் மிதவாத அரசியல் அணுகுமுறைமையாலும், தனது தலைமைத்துவத்தாலும் மக்களை அணிதிரட்டிய திரு செ.இராசதுரை அவர்களுக்கு, இலங்கைத் தமிழ்த் தேசிய அரசியலில் மாறாத நோயாக இருந்து வரும் தனிநபர்கள் சிலருடைய ஆதிக்கமும், ஏகப்பிரதிநிதித்துவக் கற்பனையும் திட்டமிட்டு வஞ்சனையைச் செய்திருக்கிருக்கின்றமை பற்றி அறியக் கிடைக்கிறது.

செ.இராசதுரை எனும் அரசியல்வாதிக்குச் செய்யும் வஞ்சகம் வடக்குக் கிழக்கு ஒருங்கிணைந்த தமிழ்த்தேசியவாதத்திற்கு நீண்ட கால நோக்கில் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும் என்பதைத் தெரிந்திருந்தும் அதிகாரத்தைத் தம்பிடிக்குள் வைத்திருப்பதற்காகப் பேராசை கொண்ட சிலர் எந்தவித தூரநோக்குகளுமின்றி இந்த வஞ்சனையைச் செயயத் துணிந்திருக்கிறார்கள்.

செ.இராசதுரைக்குச் செய்யப்பட்ட வஞ்சகம் முன்னணியிலிருந்த சில தமிழ் மிதவாதத் தலைவர்களின் உண்மையான தமிழ்த் தேசிய அக்கறையினைக் கேள்விக்குரியதாக ஆக்கியதுடன்,  ‘தமிழ்த்தேசியம்’, ‘தமிழர் விடுதலை’ என்பவை நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கான ஓர் உபாயமாகவும், ஒரு கோசமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன என்ற கருதுகோளையும் வலுப்படுத்தி நிற்கின்றது.

தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில் அதிகாரத்தைக் கைப்பற்றி அதைத் தக்க வைக்க முயற்சிக்கும் தரப்பினர் தமக்கு ஒத்துவராதவர்களை உள்ளிருந்து வெளியேற்றுவதற்காக உருவாக்கிய ‘துரோகியாக்கல்’ என்ற உத்தியின் துணையுடன் திரு செ.இராசதுரை அவர்களுக்கு எதிரான வஞ்சகம் திட்டமிடப்பட்டிருப்பதைப் பற்றி அறியவும் முடிகிறது.

இது இலங்கைத் தமிழ்த் தேசிய அரசியலில் ‘துரோகியாக்கல்’ எனும் உத்தி எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதைப் பற்றிக்; கற்றறிய உதவுவதாகவும் இருக்கிறது.

1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் திரு செ.இராசதுரை அவர்களைத் தோல்வியுறச் செய்வதற்கான வேலைத் திட்டங்கள் உள்ளிருந்தே நடைபெற்றமை பற்றி அறியக் கிடைக்கிறது.

இதற்காக மட்டக்களப்பின் இரட்டை அங்கத்தவர் தன்மை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆனாலும் சவால்கள் மிகுந்த இந்தத் தேர்தலில் மட்டக்களப்பு வாக்காளர்கள் செ.இராசதுரை அவர்களைக் கைவிடவில்லை, அவரை வெற்றி பெறச் செய்தார்கள்,

ஆனாலும் செ.இராசதுரைக்கு எதிரான உள்ளகப் ‘பனிப்போர்’ நின்றுவிடவில்லை. தனது தரப்பினருடன் பனிப்போருக்குச் செல்லாமல் அவர்கள் எதிர்பார்த்த ‘துரோகியாக்கல்’ சூழ்ச்சிக்குள் அகப்பட்டுக் கொண்டார். இத்தோடு தமிழ்த் தேசிய அரசியல் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்ததாகவே அவரது வரலாறு தெரிகிறது.

அவர் வெளியேறியதன் பின்னர் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக ஒரு ‘கட்சியையோ!’, ஒரு ‘அமைப்பையோ!’ உருவாக்கியதாக அறிய முடியவில்லை,

இதனால் எதையும் பகுத்தறிந்து பார்க்கத்தகுந்த மட்டக்களப்பு மக்களின் மனதில் அவர் நிலையாக வாழும் தன்மையினைப் பெற்றுக் கொண்டார் எனலாம்.

திரு செ.இராசதுரையின் வெளியேற்றம், மிதவாதத் தமிழ்த் தேசிய அரசியலில் வெளித் தோற்றத்திற்கு நிறுவனத் தன்மை காணப்பட்டாலும் அதனுள் தனிநபர்கள் அல்லது குழுக்களின் ஆதிக்கமும், செல்வாக்குகளும், சர்வாதிகாரப் போக்குகளும் மேலோங்கிய நிலைமையின் எதார்த்தத்தை உணரச் செய்தது.

இத்தோடு மிதவாதத் தமிழ்த் தேசியத் தலைமைகளிடையே பன்மைத்துவங்களை ஏற்றுக்கொள்ளப் பின்வாங்கும் தன்மை, உள்ளார்ந்த சனநாயகத்தின் பலகீனம், கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட குறுகியகால, நீண்டகால வேலைத் திட்டங்களில் ஆர்வமின்மை ஆகியவற்றினையும் வெளிப்படுத்தி நின்றது எனலாம்.

தமிழ்த் தேசியவாத அரசியலில் எதிர்மறை நோக்குடன் ‘பிராந்தியவாதத்தை’ வளர்த்தெடுக்க முனைவோருக்கான வாய்ப்புகளை செ.இராசதுரைக்கு நிகழ்த்தப்பட்ட வஞ்சனையும் அதன் விளைவுகளும் நன்றாக வழங்கி வந்துள்ளன எனலாம்.

து.கௌரீஸ்வரன்,

07.12.2025

நன்றி

Leave a Reply