26
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடமானது வருகின்ற தமிழ் சிங்கள புத்தாண்டையொட்டி எதிர்வரும் திங்கட்கிழமை 06.04.2026 ஆம் திகதி அன்று காலை 10.00 முதல் பிற்பகல் 03.00 மணி வரை பல்வேறு கலாச்சார மக்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் பாரம்பரிய உணவுத் திருவிழாவினை வெகுவிமர்சையானமுறையில் ஒழுங்குசெய்துள்ளது. இவ்விழாவின் தொடக்க நிகழ்வானது வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் கேட்போர்கூடத்திலும் அதனைத்தொடர்ந்து பாரம்பரிய உணவுகளின் கண்காட்சி மற்றும் விற்பனையானது வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் திறந்தவெளி வளாகத்திலும் நடைபெறவுள்ளது.
இப்பாரம்பரிய உணவுகளின் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வில், வர்த்தக முகாமைத்துவபீட மாணவர்கள் விற்பனை கூடங்களை அமைத்து பங்கேற்பதோடு மட்டுமல்லாமல் உள்ளூர் பாரம்பரிய உணவு விற்பனையாளர்கள், மட்டக்களப்பு மாவட்ட சனசமூக நிலையத்தின் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த முயற்சியாளர்கள், மண்முனை வடக்கு, கோறளைப்பற்று தெற்கு, கோறளைப்பற்று மத்தி, ஏறாவூர் பற்று மற்றும் ஏறாவூர் நகரம் போன்ற பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட உள்ளூர் கிராமிய முயற்சியாளர்கள் போன்றோரும் இணைந்து பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்வு எமது பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்களை ஊக்குவிப்பதோடு, உள்ளூர் தொழில்முனைவோரை ஆதரிக்கவும், அவர்களுடைய உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான தளத்தை உருவாக்கிக் கொடுக்கவும் பல்கலைக்கழகம் மற்றும் சமூகத்தினரிடையே இணைப்பை ஏற்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் வருடத்தைச்சேர்ந்த தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் மாணவர்கள் தத்தம் கலாச்சார உணவுகளைக் விற்பனைக்கான காட்சிக்கூடங்களில் காட்சிப்படுத்தி விற்பனைசெய்யவுள்ளதோடு அவர்களுடைய முயற்சியாண்மைத் திறன், தலைமைத்துவத்திறன், விழா ஒழுங்கமைப்புத் திறன், சந்தைப்படுத்தல் மற்றும் வியாபாரத்திறனை விருத்திசெய்வதற்கான களமாக இவ்நிகழ்வு அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. மாணவர்களை ஊக்குவிப்பதற்காக அவர்களுக்கிடையே போட்டியானது நடாத்தப்படுவதோடு ‘சிறந்த பாரம்பரிய உணவுக்கான விருது’ (‘Best Tradition Food Stall Award’) மற்றும் ‘சிறந்த கண்காட்சிகூட அலங்கார விருது’ (‘Best Stall Presentation Award’) என்பன அவர்களுடைய படைப்பாற்றல், புத்தாக்கம், தனித்துவம், கலாச்சார மற்றும் பண்பாட்டுப் பிரதிபலிப்பு, உணவின் ருசி மற்றும் தரம், சுகாதாரம், உணவுக்கான விளம்பரம், உணவினைக் காட்சிப்படுத்தும் பாங்கு மற்றும் பரிமாறும் முறை என்பவற்றின் அடிப்படையில் வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் மாணவர்கள் மொத்தமாக 22 கண்காட்சி மற்றும் விற்பனைக் கூடங்களை காட்சிப்படுத்தவுள்ளதோடு 25 க்கும் மேற்பட்ட உள்ளூர் பாரம்பரிய உணவுத்தொழில் முற்சியாளர்கள் மற்றும் அது சார்ந்த உள்ளூர் கிராமிய கைவினைக் கைத்தொழில் முயற்சியாளர்களும் பங்கேற்கவுள்ளனர். இந்நிகழ்வானது கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தினால், கிழக்குப் பல்கலைக்கழக கைத்தொழில் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு மையத்தின் (Center for Industry and Community Linkage [CICL]) ஒத்துழைப்புடன் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரதீபன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார். மேலும், கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் தலைவர் போராசிரியர் மற்றும் சிரேஸ்ட வைத்திய நிபுணர் கே. ரி. சுந்தரேசன் அவர்கள் சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பிக்க உள்ளதோடு ‘ உள்ளூர் பாரம்பரிய உணவுகளே ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கான மருந்து’ எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றவுள்ளார். இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் என். ராஜேஸ்வரன் அவர்கள், பீடத்தின் சமூகம்சார்ந்து நடைபெறும் இப்பாரம்பரிய உணவுக் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வில் பிரதான ஒழுங்கமைப்பாளராக இந்நிகழ்விற்கு தலைமைதாங்கி கலந்து சிறப்பிக்கவுள்ளார். மேலும், கிழக்குப் பல்கலைக்கழக கைத்தொழில் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு மையத்தின் (Center for Industry and Community Linkage [CICL]) தலைவர் போராசிரியர். கே. அருளானந்தம் அவர்கள் வர்த்தக முகாமைத்துவ பீடத்துடன் இணைந்து இவ்விழாவின் பிரதான ஒழுங்கமைப்பாளராகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
மேலும், இப்பாரம்பரிய கண்காட்சி மற்றும் விற்பனைத் திருவிழாவில் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள, கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர். மேலும் முகாமைத்துவ பீடத்தினதும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கைத்தொழில் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு மையத்தின் சிரேஸ்ட உதவிப் பதிவாளர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். மேலும், கிழக்குப் பல்கலைக்கழக கைத்தொழில் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு மையத்தின் பாரம்பரிய உணவித் திருவிழாவின் முன்னோடியாகச் செயற்பட்டு அதனை முதற்கட்டமாக Techno Park இல் வெற்றிகரமாக நடாத்துவதற்கு பங்களிப்புச்செய்த பேராசிரியர். எஸ். ஜெயசங்கர் அவர்களும் இந்நிகழ்வில் CICL சார்பில் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கைத்தொழில் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு மையத்தினது (CICL) முகாமைத்துவ குழுவின் வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடத்திற்கான பிரதிநிதி மற்றும் விரிவுரையாளர் திருமதி. ஷியாளினி ஹேமப்பிரகாஷ் அவர்களின் பங்களிப்புடன் வர்த்தக முகாமைத்து பீடத்தின் பீடாதிபதி மற்றும் பல்கலைக்கழக கைத்தொழில் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு மையத்தின் வழிகாட்டுதலுடன் சிறப்பான முறையில் இந்நிகழ்வானது ஒருங்கிணைந்து ஏற்பாடுசெய்யப்பட்டிருப்பதோடு, இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு ஆணிவேர் உற்பத்திகள் பிரைவேட் லிமிடட் நிறுவனமானது இணைந்து ஆதரவு (Co-Sponsor) வழங்குகின்றனது. இவ்விழா எமது சமூகத்தின் வேரூன்றிய பண்பாட்டு அடையாளத்தை வெளிப்படுத்தி உள்ளூர் தொழில் முயற்சியாளர்களை ஆதரிக்கும் தளமாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பாரம்பரிய உணவுத் திருவிழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
திருமதி. ஷியாளினி ஹேமப்பிரகாஷ்
வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடத்தின் சமூக ஒருங்கிணைப்பு மையத்தின் பிரதிநிதி (CICL),
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.
