ஆசிய கிரிக்கெட் பேரவை நடத்தும் 2025 வளர்ந்து வரும் நட்சத்திர ஆசியக் கிண்ண டி20 கிரிக்கெட் தொடர் (Asia Cup Rising Stars) நவம்பர் 14 முதல் 23 வரை கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் நடைபெறவுள்ளது.
முன்னதாக இப்போட்டித் தொடர் வளர்ந்து வரும் அணிகள் ஆசியக் கிண்ணம் என்ற பெயரில் நடத்தப்பட்டது.
8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் முதல் சுற்றில் இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும்.
இதில் இந்தியா, பாகிஸ்தான், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் ‘A’ பிரிவிலும், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங்காங் ஆகிய அணிகள் ‘B’ பிரிவிலும் இடம்பிடித்துள்ளன.
அண்மைக் காலத்தில் நடத்தப்பட்ட பல அணிகளின் தொடர்களின் வடிவமைப்பைப் பின்பற்றியே இத்தொடரும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் முதல் சுற்றில் மோதுவது இதற்கு சிறந்த உதாரணமாகும்.
பெரும்பாலானோரின் கவனத்தைப் பெறும் இப்போட்டியானது நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது.
முதல் சுற்றில், ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் லீக் முறையில் மோத வேண்டும்.
நவம்பர் 14 முதல் 19 வரை ஒவ்வொரு நாளும் இரண்டு போட்டிகள் வீதம் நடத்தப்படும்.
நவம்பர் 21ஆம் திகதி இரண்டு அரையிறுதிப் போட்டிகளும், நவம்பர் 23ஆம் திகதி இறுதிப்போட்டியும் நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதில் ‘A’ பிரிவின் முதலிடம் மற்றும் ‘B’ பிரிவின் இரண்டாமிடத்தைப் பிடிக்கும் அணிகள் முதல் அரையிறுதியில் மோதுவதுடன், ‘B’ பிரிவின் முதலிடம் மற்றும் ‘A’ பிரிவின் இரண்டாமிடம் பிடிக்கும் அணிகள் இரண்டாவது அரையிறுதியில் மோதும்.
இவ்விரு போட்டிகளிலும் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
