விநாயகர் சதுர்த்தி: மரவள்ளிக்கிழங்கால் தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகள்

தமிழகம் முழுவதும் இன்றைய தினம்  விநாயகர் சதுர்த்தி  கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. விநாயகர் சதுர்த்தி என்பது தடை நீக்கும் தெய்வமாகக் கருதப்படும் வினாயகர் பிறந்த நாளைக் கொண்டாடும் முக்கிய இந்து திருவிழாவாகும்.

தமிழ் மாதம் ஆவணி சதுர்த்தி நாளில் நடைபெறும் இவ்விழாவில், வீடுகள் மற்றும் கோவில்களில் வினாயகர் சிலைகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. அறிவு, புத்திசாலித்தனம் மற்றும் வளம் தரும் தெய்வமாக வினாயகர் வணங்கப்படுவதால், குடும்பம் முழுவதும் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்வது வழக்கம். பத்து நாட்கள் வரை நடைபெறும் இவ்விழாவின் இறுதியில், விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீரில் கரைக்கப்படுகின்றன.

அந்தகையில் விநாயகர் சதுர்த்தியினை  முன்னிட்டு தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் தயாரிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறன.  இதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்ட மானாமதுரை ராம் நகரைச் சேர்ந்த சிற்பி முத்துராமலிங்கம் மரவள்ளிக்கிழங்கைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விநாயகர் சிலைகளை உருவாக்கி வருகிறார்.

அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப மரவள்ளிக்கிழங்கு மாவினால் 5 அடி முதல் 10 அடி உயரம் வரை விதவிதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. இரசாயனங்கள் மற்றும் தீந்தைகளை பயன்படுத்தப்படாமல், வடஇந்தியாவில் ஹோலி பண்டிகைக்காக பயன்படுத்தப்படும் இயற்கை வர்ணப் பொடிகள் மட்டுமே சிலைகளுக்கு பூசப்படுகின்றன.

இந்த முறையில் வடிவமைக்கப்படும் சிலைகள் விலை குறைவானவை, எளிதில் எடுத்துச் செல்லக்கூடியவை என்பதால் பலர் ஆர்டர் செய்து வருகின்றனர். மேலும், இந்த சிலைகள் நீரில் கரைந்த பின் மீன்களுக்கு உணவாகவும் பயன்படும்.

களிமண் சிலைகள் எடையில் அதிகமாக இருப்பதால் எடுத்துச் செல்ல சிரமம் உண்டாகும் நிலையில், மரவள்ளிக்கிழங்கு மாவினால் தயாரிக்கப்படும் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாமல் நீரில் எளிதில் கரையும் ”இவ்வாறு சிற்பி முத்துராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply