நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கான சுகாதாரப் பராமரிப்பு என்பது அவர்களுக்கான தனி மனித உரிமை என சுகாதரா அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனைகளை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள சிறப்பு சுகாதார மருத்துவத் திட்ட நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிறுவப்பட்ட 24 சிறை மருத்துவமனைகளில், சிறைஅதிகாரிகள், கைதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக சிறப்பு மருத்துவ முகாம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சுகாதார அமைச்சர் அதில் கலந்து கொண்டிருந்தார்.
இந்த மருத்துவ முகாம், வெலிக்கடை சிறைச்சாலை மற்றும் சீர்திருத்த பயிற்சி மைய வளாகத்தில் நேற்று இடம்பெற்றது. இது குறித்து சுகாதரா அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்துத் தெரிவிக்கையில் ”சிறைச்சாலை மருத்துவமனைகளில்
அவசர சிகிச்சை பிரிவுகளை நிறுவுவதன் மூலம் மனித மற்றும் பௌதீக வளங்களை பாதுகாக்க முடியும் சிறைச்சாலைகளில் தொற்றா நோய்கள் அதிகரிப்பதற்கு மன அழுத்தமும் ஒரு காரணமாகவுள்ளது.
நாட்டில் கைதிகளுக்கான சுகாதாரப் பராமரிப்பு என்பது ஒரு சலுகை அல்ல, மாறாக ஒரு உரிமையாகும், பணி நெருக்கடி மற்றும் போதுமான ஊழியர்கள் இல்லாமை போன்ற மன அழுத்தம் நிறைந்த சுற்றுச்சூழல் நிலைமைகளும் சிறைச்சாலைகளில் தொற்றா நோய்கள் அதிகரிப்பதற்கு காரணமாகியுள்ளன.
இந்த திட்டம் நேற்று முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும். சிறைச்சாலை மருத்துவமனைகளில் மருத்துவர்கள் உட்பட தேவையான சுகாதார ஊழியர்கள் விரைவில் அவசர சிகிச்சை பிரிவுகளை நிறுவ இணைக்கப்படுவார்கள் சிறைச்சாலை மருத்துவமனைகளில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.சிறைச்சாலை மருத்துவமனைகளின் மகளிர் விடுதிகளில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க அவசர நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.