அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நாட்டிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100% சுங்கவரி விதிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இது ஹொலிவுட் திரையுலகில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ட்ரம்ப், தனது ட்ருத் பக்கத்தில்,” குழந்தையிடமிருந்து மிட்டாயை பறித்துக்கொண்டது போல எங்கள் திரைப்படத் துறை மற்ற நாடுகளால் திருடப்பட்டுவிட்டது, எனக் குறிப்பிட்டார்.
வெள்ளை மாளிகையும் முக்கிய அமெரிக்க திரைப்பட நிறுவனங்களான Warner Bros Discovery, Paramount Skydance, Netflix ஆகியவையும் இதுகுறித்து எவ்வித கருத்து தெரிவிக்கவில்லை.
இதேவேளை பொருளாதார ஆய்வாளர்கள், சுங்கவரி விதிக்கப்பட்டால் திரைப்பட தயாரிப்பு செலவுகள் அதிகரிக்கும், அதன் சுமை நேரடியாக பார்வையாளர்களுக்கு (டிக்கெட் விலை, ஸ்ட்ரீமிங் கட்டணம்) மாற்றப்படும் என எச்சரித்துள்ளனர்.ஹொலிவுட் கடந்த சில ஆண்டுகளாக கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குறைந்த வரி சலுகைகள் காரணமாகப் பெரும்பாலான படப்பிடிப்புகளை நடத்தி வருகிறது. அதேபோல், ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்த தயாரிப்புகளும் அதிகரித்து வருகின்றன.
திரைப்படத் துறையினரின் கூற்றுப்படி, இப்படியான சுங்கவரி அமல்படுத்தப்பட்டால் வெளிநாடுகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான அமெரிக்க தொழிலாளர்களும் பாதிக்கப்படலாம் எனக் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.