சென்னை: போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் புற்றுநோய் சிகிச்சைக்கான அனைத்து மருத்துவ சேவைகளையும் ஒருங்கிணைந்து வழங்குவதற்கான சிறப்பு மையம் நேற்று திறக்கப்பட்டது.
நிறுவனத்தின் வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம் தலைமையில், சென்னை புற்றுநோய் மையத்தின் துணை செயல் தலைவரும், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவர் எப்.ஹேமந்த் ராஜ் இந்த மையத்தைத் திறந்து வைத்தார்.
மருத்துவர் ஹேமந்த் ராஜ் பேசும்போது, “மருத்துவர்கள் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதுடன், நோயாளிகளுடன் நேரம் செலவிட்டு, அவர்களின் கவலைகளைக் கேட்டு, உணர்ச்சி ரீதியான ஆதரவை வழங்க வேண்டும். நோயாளிகளின் குடும்பத்தினரிடம் நோயின் தன்மை மற்றும் சிகிச்சை முறைகளை பற்றியும் விளக்க வேண்டும்.
புற்றுநோய் சிகிச்சை துறையில் பல்வேறு மருத்துவ ஆராய்ச்சி வாய்ப்புகள் உள்ளன. அதை இளம் மருத்துவர்கள் மேற்கொள்ள வேண்டும். சென்னை புற்றுநோய் மையத்தின் நோயாளிகளின் பதிவேடு ஸ்ரீராமச்சந்திரா பதிவேட்டுடன் இணைக்கப்படுவதன் மூலமாக சிகிச்சை முறைகள் மேம்படும். புதிய ஆராய்ச்சிகளுக்கு ஏதுவாக இருக்கும்” என்றார்.
துணைவேந்தர் மருத்துவர் உமா சேகர் பேசுகையில், “இந்த சிறப்பு மையம் உயர்தரமான வசதிகளையும் ஒரே இடத்தில் உள்ளடக்கியதாக உள்ளது. இந்த சிறப்பு மையத்தின் நோக்கம், நோயாளிகளுக்கு தனித்துவமான மற்றும் நெறிமுறை சார்ந்த உயர்தர சிகிச்சை அளிப்பதாகும்” என்றார்.
இந்த நிகழ்வில், மருத்துவக் கல்லூரி தலைவர் மருத்துவர் கே.பாலாஜி சிங், மருத்துவ மைய இயக்குநர் மருத்துவர் ஆர்.பி.சுதாகர் சிங், மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் பி.சுரேந்திரன், புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறை தலைவர் மருத்துவர் ஜகதீஷ் சந்திர போஸ், புற்றுநோய் கதிர்வீச்சு துறைத் தலைவர் மருத்துவர் கே.சதீஷ் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
