⚓ இலங்கை மீனவர்கள் மீது  தாக்குதல் – இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுப்பு

ஜனவரி 29 ஆம் திகதியன்று இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடா்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்த அறிக்கையில்

ஜனவரி 29, 2026 அன்று இந்தியக் கடற்படை அல்லது இந்தியக் கரையோரக் காவல்படையினரால் இலங்கை மீனவர்கள் மீது எந்தவொரு தாக்குதலும் நடத்தப்படவில்லை என்பதை இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது. ஊடகங்களில் வெளியான செய்திகளைத் தொடர்ந்து நடத்தப்பட்ட உள்வாரியான விசாரணைகளின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் மனிதாபிமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும், எந்தச் சூழலிலும் பலப்பிரயோகம் செய்யப்படுவதில்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

இலங்கை கடற்தொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், இலங்கை கடற்பரப்பிற்குள் வைத்து இந்தியக் கரையோரக் காவல்படையினர் மீனவர்களைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த நான்கு மீனவர்கள் காலி – கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ‘தினகரன் துவா 1 & 2’ மற்றும் ‘சந்துன்புதா’ ஆகிய படகுகள் தாக்குதலுக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கை அரசாங்கம் இது குறித்து தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ள நிலையில், இரு நாடுகளும் இராஜதந்திர ரீதியில் இந்தப் பிரச்சினையை அணுகி வருகின்றன. மேலதிக உண்மைகளைக் கண்டறிய இலங்கை கடற்படையும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Tag Words: #FishermenIssue #IndiaSriLanka #MaritimeBorder #IndianHighCommission #LKA #BreakingNews2026 #DiplomaticUpdate #SriLankaFishermen

நன்றி

Leave a Reply