யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் சுமார் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாகவே இந்த சீரற்ற காலநிலை நிலவுகிறது. இந்த மோசமான காலநிலை காரணமாக யாழ். தீவகங்களுக்கான (நெடுந்தீவு, நயினாதீவு போன்ற இடங்கள்) கடல் போக்குவரத்துக்கள் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால், மீனவர்கள் எவரும் கடற்றொழிலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டச் செயலாளரின் தலைமையில் சகல பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலர்களுடனான அவசரக் கூட்டம் நடத்தப்பட்டு, அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
வளிமண்டலவியல் திணைக்களம் வழங்கும் தகவல்கள் உடனுக்குடன் கிராம மட்ட அலுவலர்கள் ஊடாகப் பகிரப்படுவதால், பொதுமக்கள் வதந்திகளை நம்பிப் பீதியடையத் தேவையில்லை என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும், ஏதேனும் அவசர நிலைமைகள் ஏற்பட்டால் உடனடியாகத் தத்தமது பகுதி கிராம அலுவலரைத் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Tag Words: #JaffnaWeather #RainAlertSL #DisasterManagement #SriLankaNews #WeatherUpdate2026 #JaffnaNews #SeaTransportSuspended #StaySafe
The post 🌧️ யாழ்ப்பாணத்தில் 100 மி.மீ மழை எதிர்பார்க்கப்படுகிறது: appeared first on Global Tamil News.
