59
திருகோணமலை, கந்தளாய் அக்போபுர (Agbopura) காவல்துறைப் பிரிவில் கடமையில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் பெரும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. அக்போபுர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றை அறிக்கையிடுவதற்காகச் சென்ற ஊடகவியலாளர் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய லொறியின் சாரதி மற்றும் அவரது உதவியாளர் ஆகிய இருவருமே இணைந்து ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். விபத்து நடந்த இடத்தை ஊடகவியலாளர் தனது கமரா மூலம் ஒளிப்பதிவு செய்தமை தொடா்பில் ஆத்திரமடைந்த சந்தேகநபர்கள், அவரது கடமைக்கு இடையூறு விளைவித்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இத்தாக்குதலில் காயமடைந்த ஊடகவியலாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன், அவரது ஊடக உபகரணங்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கந்தளாய் பிரதேச ஊடகவியலாளரே இவ்வாறு லொறி சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோரால் தாக்கப்பட்டவராவார்.
சம்பவம் தொடர்பில் அக்போபுர காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, தாக்குதல் நடத்திய லொறி சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவரையும் கைது செய்துள்ள காவல்துறையினா் சந்தேகநபர்களை கந்தளாய் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனா்.
இலங்கையில் அண்மைக்காலமாக ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் ஊடக அமைப்புகளிடையே பலத்த எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.
Tag Words: #KanthaleNews #JournalistAttacked #Agbopura #MediaFreedom #LKA #BreakingNews2026 #PoliceArrest #SriLankaCrime
