1 லட்சம் ஸ்மார்ட் குடிநீர் மீட்டர் கொள்முதல்: அடுக்குமாடி குடியிருப்புகளில் பொருத்தும் சென்னை குடிநீர் வாரியம் | Chennai Water Board fix smart water meters in apartments

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கொள்முதல் செய்யப்பட உள்ள 1 லட்சம் ஸ்மார்ட் குடிநீர் மீட்டர்களை முதல்கட்டமாக அடுக்குமாடி குடியிருப்புகளில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை குடிநீர் வாரியம், 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்கியுள்ளது.

இதன் மூலமும், லாரிகள் மூலமும் தினமும்1300 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகித்து வருகிறது. சென்னை குடிநீர் வாரியம் சார்பில் ஏரி நீரை சுத்திகரித்து குடிநீராக வீடுகளில் கொண்டு வந்து சேர்க்க 1000 லிட்டருக்கு ரூ.8-ம், கடல்நீரை குடிநீராக்க ரூ.47-ம் செலவிடுகிறது.

ஆனால் கட்டணமாக, அளவில்லாத குடிநீர் பயன்பாட்டுக்கு, சாதாரண வீடுகளுக்கு மாதம் ரூ.105, அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளுக்கு மாதம் ரூ.200 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த நீரை பலர் கார்களைகழுவவும், வீட்டுத் தோட்டங்களுக்குப் பாய்ச்சவும், வீடுகளில் கட்டியுள்ள நீச்சல் குளத்தை நிரப்பவும் பயன்படுத்துகின்றனர்.

எனவே, ஏழை மக்களுக்கும், இவர்களுக்கும் ஒரே கட்டணத்தை வாரியம் வசூலிப்பதை மாற்றவும், வீணாக்கப்படுவதை தடுக்கவும், குடிநீர் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மின் கட்டணத்தைப் போன்று, பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்க சென்னை குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது.

அதற்காக 1 லட்சம் ஸ்மார்ட் குடிநீர் மீட்டர்களை கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் அடுக்குமாடி குடியிருப்புகள், அதைத் தொடர்ந்து 2400 சதுர அடிக்கு மேல் பரப்பு கொண்ட குடியிருப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. இதனிடையே இத்திட்ட செயலாக்கத்தை கண்காணிக்க தனி கலந்தாலோசகரை நியமிக்கவும் குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

நன்றி

Leave a Reply