11 குழந்தைகள் உயிரிழப்பு; இருமல் மருந்தை பரிந்துரைத்த மருத்துவர் கைது

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், இருமல் மருந்தைக் குடித்த 11 குழந்தைகள் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,  அண்டை மாநிலமான ராஜஸ்தானின் சிகாரிலும், இரண்டு குழந்தைகள் சிறுநீரகங்கள் செயலிழந்து உயிரிழந்தன.

இதனையடுத்து, இரு மாநிலங்களிலும், இந்த மருந்து உட்பட 15க்கும் மேற்பட்ட மருந்துகள் விற்க தடை விதிக்கப்பட்டது. மத்திய பிரதேசத்தில் இறந்தவர்களில் பெரும்பாலான குழந்தைகள் பராசியாவில் உள்ள குழந்தை நல மருத்துவரான பிரவீன் சோனியின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

எனவே குழந்தைகளுக்கு கோல்ட்ரிப் இருமல் மருந்தை பரிந்துரைத்து கவனக்குறைவாகச் செயல்பட்டதாக மருத்துவர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டார். அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் பணியிடை நீக்கம்மும் செய்யப்பட்டுள்ளார்.

குழந்தைகளை பலி கொண்ட இருமல் மருந்தில், ‘டை-எத்திலீன் கிளைக்கால்’ எனப்படும் அதிக நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள் சுமார் 48.6% அளவுக்கு இருந்ததாக ஆய்வக அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

பிரவீன் சோனி மற்றும் இந்த மருந்தை உற்பத்தி செய்த தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரேசன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்குத் தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

நன்றி

Leave a Reply