56
யாழ்ப்பாணத்தில் சுமார் 1,134 ஏக்கர் பரப்பளவில் 533 கடலட்டைப் பண்ணைகள் இயங்கி வருகிறது என கரையோர நீர்வாழ் உயிரினச் செய்கை விரிவாக்கல் மற்றும் கண்காணிப்புப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நீர்வாழ் உயிரினச் செய்கை தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத்தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடலட்டை வளர்ப்பு பெரியளவில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது, குறிப்பாக வேலணை, யாழ்ப்பாணம், நல்லூர் மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய பிரதேசங்களில் சுமார் 1,134 ஏக்கர் பரப்பளவில் 533 கடலட்டைப் பண்ணைகள் இயங்கி வருகிறது.
மேலும், ஊர்காவற்துறை, வேலணை, சங்கானை மற்றும் நெடுந்தீவு ஆகிய பகுதிகளில் கடற்பாசி வளர்ப்பும் தீவிரமாக ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது. வடக்கு மாகாணத்தின் புவியியல் அமைப்பைப் பயன்படுத்திப் புதிய வளர்ப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்த முடியும்.
இதற்கமைய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இறால், நண்டு மற்றும் சிப்பி வகை வளர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும், கடலட்டை குஞ்சு உற்பத்தி நிலையங்களை உருவாக்குவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள பண்ணைகளின் சனநெரிசலைக் குறைத்தல், பூநகரி போன்ற பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் உள்ளூர் கடற்றொழிலாளர்களின் பாரம்பரியத் தொழில்களுடன் ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான சுமுகமான பொறிமுறைகளை உருவாக்க வேண்டியதன் அவசியம் உள்ளது.
இவ்வாறான சவால்கள் தீர்க்கப்படுவதன் ஊடாக வடக்கு மாகாணத்திலிருந்து வருடாந்தம் அண்ணளவாக 100 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார்,
இலங்கையின் கடலட்டைப் பண்ணைகளுக்குச் சர்வதேச சந்தையில் உள்ள மிகச் சிறப்பான வர்த்தக நாமத்தைப் பாதுகாப்பதற்கு, அனுமதியின்றி இயங்கும் பண்ணைகளை ஒழுங்குமுறைப்படுத்துவது கட்டாயமானது. திணைக்களங்கள் சில விட்டுக்கொடுப்புகளுக்குத் தயாராக உள்ள நிலையில், இந்த ஒழுங்குமுறைப்படுத்தல் செயற்பாடுகளுக்குப் பண்ணையாளர்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி ஓர் இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்.
கடலட்டை வளர்ப்புக்கு வடக்கு மாகாணம் மிகவும் பொருத்தமான அமைவிடத்தைக் கொண்டுள்ளமையால், அதற்கான காணிகளை அடையாளப்படுத்தும் வீதி வரைபடத்தை விரைவாகத் தயாரிக்க வேண்டும், ஏற்கனவே வர்த்தமானியில் வெளியிடப்பட்ட காணிகளை முன்னுரிமை அடிப்படையில் அடையாளப்படுத்த வேண்டும், இவற்றில் உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
#JaffnaAquaculture #SeaCucumberExport #EconomicGrowthSL #NorthernFisheries #BlueEconomy
