எல்ல பகுதியில் 16 பேரின் உயிரிழப்புக்கு காரணமான பேருந்து விபத்து தொடர்பான முழுமையான அறிக்கை அமைச்சர் பிமல் ரத்தநாயக்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை இன்று (22) போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சில் வைத்து அதனுடன் தொடர்புடைய அமைச்சரிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த வீதியில் நிறுவப்பட்ட வீதி சமிக்ஞைகள் மற்றும் பிற எச்சரிக்கை பலகைகள், வீதியின் ஆபத்தான தன்மையைப் பற்றி ஒரு அறிமுகமில்லாத வாகன சாரதிக்கு தெரியப்படுத்த போதுமானதாக இல்லை என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான NB-1673 பேருந்தை அந்த விபத்தில் உயிரிழந்த சாரதி முதன் முறையாக குறித்த சுற்றுலாவின் போதே செலுத்தியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
வீதியைப் பற்றிப் பரிச்சயமில்லாத சாரதியினால், செங்குத்தான சரிவுகள் மற்றும் வளைவுகள் கொண்ட ஆபத்தான வீதியில், ஒரு குழுவினருடன் பேருந்தை ஓட்டிச் சென்றமையினால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.
அத்துடன் விபத்துக்குள்ளான பேருந்தின் அடையாளம் கேள்விக்குரியது என்றும் அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
பேருந்தின் பிரேக் பகுதிகள் அகற்றப்பட்டு சோதனையிடப்பட்ட நிலையில் முன் மற்றும் பின் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்தவை அதிகளவில் தேய்ந்திருந்தமையை அவதானிக்க முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பின் சக்கரத்தின் பிரேக் சிஸ்டத்தில் கிரீஸ் கசிவு ஏற்பட்டிருந்ததாகவும் குறித்த அறிக்கை கூறுகிறது.
விபத்து தொடர்பில் ஆராய்ந்த குழுவின் அறிக்கையின்படி, விபத்தில் சிக்கிய பேருந்து முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும், பிரேக்கிங் சிஸ்டத்தில் குறைபாடுகள் இருந்தன என்றும் தெரியவந்துள்ளது.
பேருந்தை செலுத்திய சாரதி அந்த வீதி தொடர்பில் எவ்வித முன் அறிவும் இல்லாமல் செயல்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தங்காலை நகராட்சி சபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா சென்று திரும்பிய சந்தர்ப்பத்தில் எல்ல – வெல்லவாய வீதியின் 24வது மைல்கல் பகுதியில் உள்ள பள்ளத்தில் கடந்த 4 ஆம் திகதி இரவு வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்ததோடு 16 பேர் வரை காயமடைந்தனர்.
விபத்து குறித்து விசாரணை செய்ய மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் தலைமையில் 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.
விபத்து குறித்து விரிவான விசாரணைகளை நடத்திய பின்னர் குழு தமது அறிக்கையை தயாரித்துள்ளதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.