அரிய வகை காந்தங்களை அமெரிக்காவுக்கு வழங்காவிட்டால், 200 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் சீனாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
தானியங்கி வாகனங்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் மிக முக்கியமாக அரிய வகை காந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த முக்கிய கனிமங்களின் உற்பத்தியில், சீனா ஏகபோக உரிமையை கொண்டுள்ளது. இதன் காரணமாக, உலக வர்த்தகத்தில் தனி செல்வாக்குடன் சீனா உள்ளது.
இந்நிலையில், அரிய வகை காந்தங்களின் ஏகபோக உரிமையை தன் கட்டுப்பாட்டில் புத்திசாலித்தனமாக சீனா வைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், அமெரிக்காவுக்கு இந்த அரிய வகை காந்தங்களை வழங்கவில்லை என்றால், சீனா மீது 200 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து டிரம்ப் நேற்று கூறியுள்ளதாவது:
அமெரிக்கா – சீனா இடையே சிறப்பான உறவு இருந்தாலும், சீனாவை விட அமெரிக்கா அதிக செல்வாக்கை கொண்டுள்ளது. அவர்களை விட எங்களிடம் மிகப்பெரிய மற்றும் சிறப்பான அஸ்திரங்கள் உள்ளன. நான் அந்த அஸ்திரங்களை பயன்படுத்தினால், அது சீனாவையே அழித்து விடும். ஆனால், நான் அந்த அஸ்திரங்களை உபயோகிக்கப் போவதில்லை.
அரிய வகை காந்தங்களை அமெரிக்காவுக்கு சீனா வழங்க வேண்டும். அவர்கள் அவ்வாறு வழங்கவில்லை என்றால், நாம் அவர்களிடம் 200 சதவீதம் வரி அல்லது அதற்கு ஈடாக எதையாவது அறவிட வேண்டும்” இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.