
2015 ஆம் ஆண்டை நினைவூட்டும் ஜெனீவா கூட்டத் தொடர்! தமிழர் நிலைப்பாடு என்ன?
2015 ஆம் ஆண்டு வட மாகாணசபை தமிழ் இன அழிப்புக்கான சர்வதேச நீதி கோரிய தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியது. அதைப் பெருத்த வில்லங்கமான நகர்வாக புவிசார் அரசியலில் ஈடுபட்டிருந்த சர்வதேச தரப்புகள், குறிப்பாக மேற்கு நாடுகளின் தரப்புகள் கணிப்பிட்டன.
ஏனெனில், வெறும் மனித உரிமை மீறல்களாகவும், போர்க்குற்றங்களாகவும், மனிதத்துவத்துக்கெதிரான குற்றங்களாகவும் இலங்கையில் போரில் ஈடுபட்டிருந்த இரு தரப்புகளையும் குற்றங்களிற் சமப்படுத்தி தமது புவிசார் நலன்களுக்கு ஏதுவான ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தும் தமது நிகழ்ச்சிநிரலுக்கு நேர் முரணான நிலைப்பாட்டை ஈழத் தமிழர் விடுதலை அரசியலில் உயிர்த்தெழச் செய்யும் வலு அந்த வட மாகாணசபைத் தீர்மானத்துக்கு இருந்தது.
பத்து வருடங்களின் பின்னர் மீண்டும் அதையொத்த வகையில் ஈழத்தமிழர் தரப்பு குறிவைக்கப்படுகின்றது.
அப்போது போலவே தற்போதும் இந்த வெளிப்பின்னணியைப் பலரும் அறியாதுள்ளனர்.
இந்தக் குறிவைப்பில் ஐரோப்பிய மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகள் சிலவற்றின் சார்பில் இயங்கும் சில அரசசார்பற்ற நிறுவனங்களின் அனுரணையோடு இலங்கையில் தமது நிகழ்ச்சி நிரலை வெளிப்படுத்திக் கொள்கின்றன.
அரசுகளின் உதவிகளோடு இயங்கும் இந்த அமைப்புகள் அரசசார்பற்ற தன்னார்வ நிறுவனங்கள் என்று தம்மைத் தாமே விளம்பரப்படுத்திக்கொள்ளுவது வழமை.
பொதுவெளியில் தமது நிகழ்ச்சிநிரல் பற்றிய தடயங்கள் அதிகம் வெளிப்படாத வகையில் செயற்படவேண்டும் என்ற திட்டத்தோடு இவை இயங்குகின்றன.
இந்த மறைபொருளான நிகழ்ச்சிநிரல் பற்றி ஓரளவு அறிந்தவர்கள் தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபடுபவர்களிடம் இது பற்றிக் கேட்டால், அக் கேள்விகளைச் சதிக் கோட்பாடுகளாக கருதி அவற்றைத் தட்டிக் கழிக்கும் மனப்பாங்கு பலரிடம் 2015 இல் காணப்பட்டதைப் போலவே தற்போதும் காணப்படுகிறது.
இருந்தாலும், இது குறித்த விழிப்புணர்வு பொதுவெளியில் ஏற்படவேண்டிய தேவை மீண்டும் எழுந்துள்ளது.
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பான தீர்மானம் மீண்டும் நிறைவேற்றப்படவுள்ள பின்னணியில் ஈழத்தமிழர்கள் ஆழமாக சிந்திக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
இதுவரை காலமும் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த காலக்கெடு எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில், மீண்டும் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படும் தீர்மானம், தமிழர்கள் எதிர்ப்பார்ப்பது போன்று அமையக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை.
இப் பின்னணியில்தான் 2015 ஆம் ஆண்டு மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் போது எடுக்கப்பட்ட நிலைப்பாட்டை ஒத்த கருத்தியல் மீண்டும் எழக்கூடும் என்றும் அதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் ஒத்துழைப்பு வழங்கக் கூடிய அல்லது தெரிந்தும் தெரியாதது போன்று இருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இல்லாமில்லை.
அ.நிக்ஸன்-