2025 ஆசியக் கிண்ணப் போட்டியில் இன்று (10) நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா ஐக்கிய அரபு எமிரேட்ஸை எதிர்கொள்கிறது.
இந்தப் போட்டியானது இலங்கை நேரப்படி இன்று இரவு 08.00 மணிக்கு டுபாயில் ஆரம்பமாகும்.
7 மாதங்களுக்கு பின்னர் இந்திய அணி விளையாடப்போகும் முதல் சர்வதேச டி20 போட்டி இதுவாகும்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்கும் டி20 உலகக் கிண்ண போட்டிக்கு இந்திய அணியை தயார்படுத்துவதற்கும், சரியான 11 வீரர்களை கண்டறிவதற்கும் இந்த தொடர் வாய்ப்பாகும்.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் அய்யருக்கு இடம் வழங்கப்படாதது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
அவருக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற சுப்மன் கில் துணை தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
இது போன்ற சலசலப்புகளை மறந்து விட்டு இந்திய வீரர்கள் போட்டிக்கு முழுவீச்சில் ஆயத்தமாகியுள்ளனர்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பணிச்சுமையால் இரு போட்டிகளை தவற விட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 20 ஓவர் அணிக்கு திரும்பியிருப்பது இந்தியாவுக்கு பலமாகும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி மொஹமட் வசீம் தலைமையில் களம் காணுகிறது.
20 ஓவர் கிரிக்கெட்டில் தலைவராக அதிக சிக்சர் விளாசியவர் (114 சிக்சர்) என்ற பெருமைக்குரியவர் வசீம்.
இவ்விரு அணிகள் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 4 முறை (ஒரு 20 ஓவர் போட்டி மற்றும் மூன்று ஒரு நாள் போட்டி) சந்தித்துள்ளது.
அனைத்திலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.