2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்!

2025 ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்க கலந்துரையாடல் இன்று (25) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

நகர மற்றும் கிராமிய வீடமைப்பு நிர்மாணத் திட்டங்கள், நகர அபிவிருத்தித் திட்டங்கள், நகர திட்டமிடல் திட்டங்கள், கழிவு முகாமைத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டங்கள், நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் திட்டங்கள் போன்ற துறைகள் குறித்து இங்கு கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

இந்தத் துறைகளுடன் தொடர்புடைய நாட்டின் ஒவ்வொரு மாகாணத்திலும் செயல்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.

குறிப்பாக, கடந்த கால பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் தொடங்குவதிலும், தொடங்கப்பட்ட திட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்பதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இந்த ஆண்டு தொடங்கப்பட்ட திட்டங்களை இந்த ஆண்டு குறிப்பிட்ட இலக்குகளை நோக்கி வழிநடத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அரசாங்கம் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுக்கு முறையாக நிதி ஒதுக்கியிருந்தாலும், அவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முறையாகப் பயன்படுத்தப்படாவிட்டால் அது ஒரு பிரச்சினையே என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

வீடுகள் மற்றும் கட்டிடங்களை நிர்மாணிப்பதிலும், நகர திட்டமிடலிலும் சம்பந்தப்பட்ட பகுதி மக்களின் கருத்துகள் மற்றும் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, முந்தைய அரசாங்கங்களால் தங்கள் சொந்த விருப்பப்படி மேற்கொள்ளப்பட்ட நிர்மாணங்கள் காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்படாத மற்றும் குறைந்த பயன்பாடுள்ள அரசாங்க கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

கடந்த காலங்களில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தொடங்கப்பட்ட 18 பாலம் நிர்மாணிக்கும் திட்டங்கள் பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளதாகவும், அந்தக் நிர்மாணப் பணிகள் காரணமாக தற்காலிகமாக பயன்படுத்தப்பட்ட வீதிகள் சதுப்பு நிலங்கள் போல மாறியுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. அந்தத் திட்டங்களுடன் தொடர்புடைய நிர்மாணங்களை பூர்த்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

குறிப்பாக, சீன மற்றும் இந்திய கடன் உதவியின் கீழ் செயல்படுத்தப்படும் வீட்டுத் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து இங்கு ஆராயப்பட்டது. வடக்கு மற்றும் கிழக்கில் மீள்குடியேற்றம் தொடர்பான வீட்டுத் திட்டங்களை இந்த ஆண்டு நிறைவு செய்ய முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் “ஹோமாகம டெக்சிட்டி” திட்டத்துடன் தொடர்புள்ள வீதி அபிவிருத்தித் திட்டங்கள், “பொலன்னறுவை நிர்வாக வளாகம்” மற்றும் “சிட்டி பிராண்டிங் திட்டம்” ஆகியவற்றின் தற்போதைய நிலைமை குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

நகர்ப்புற மக்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள அடுக்குமாடி வீட்டுத் திட்டங்களை அவர்களுக்கு ஒப்படைப்பதில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, சேதமடைந்த வீடுகளை அவர்களிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக அவற்றை புதுப்பித்து வழங்குவதன் முக்கியத்துவத்தையும், அவை வழங்கப்பட்டவுடன் அவற்றைப் பராமரிப்பதற்கான முறையான பொறிமுறையை வகுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அரை நகர்ப்புறங்களில் அடுக்குமாடி வீட்டுத் திட்டங்களுக்கான அந்தப் பகுதி மக்களின் தேவை மற்றும் விருப்பத்தைக் கண்டறிய ஒரு கணக்கெடுப்பை நடத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி விளக்கினார்.

காணி கையகப்படுத்துதல் தொடர்பான கொடுப்பனவுச் செயல்முறைகளில் எழுந்துள்ள சட்ட சிக்கல்கள் குறித்து அதிகாரிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். அந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்கான முன்மொழிவுகளைத் தயாரிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

அரசாங்க வீட்டுத் திட்டங்களில் ஊடாக தற்போது பயன் பெறாத, ஆனால் பயனடைய வேண்டிய மக்களுக்காக அரசாங்க தலையீட்டுடனான ஒரு பொறிமுறையொன்று குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது. இது குறித்து வங்கிகளுடன் கலந்துரையாடி அரசாங்க பங்களிப்புடன் ஒரு பொறிமுறையை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கழிவு முகாமைத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.

வேரஸ் நதித் திட்டம்,கொலன்னாவ மழைநீர் திட்டம் உள்ளிட்ட வெள்ளம் மற்றும் அனர்த்தங்களைத் தடுக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டன.

இந்தத் திட்டங்கள் “கிளீன் ஸ்ரீலங்கா ” திட்டத்தின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளம் உள்ளிட்ட அவசர நிலைகளைச் சமாளிப்பதற்கான முன்கூட்டிய திட்டங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

நீர் வழங்கல் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு திட்டங்களின் கீழ் யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி, அநுராதபுரம் மற்றும் களுத்துறை போன்ற பகுதிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களும் இங்கு ஆராயப்பட்டன.

முந்தைய அரசாங்கங்களின் கீழ் நீர் வழங்கல் கொள்ளளவை அதிகரிப்பதற்காக தருவிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் கைவிடப்பட்ட நீர் குழாய்களைப் பயன்படுத்தி கிராமியப்பகுதிகளில் நீர் விநியோகத்தை முறைப்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.

நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களை மேம்படுத்த வேண்டியதன் அவசியம், குறிப்பாக அரசாங்கத்தால் சம்பந்தப்பட்ட நிர்மாணப்பணிகளுக்காக ஆலோசனை சேவையை நிறுவ வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆராயப்பட்டது.

நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் டீ.பீ. சரத், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும,நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன, ஜனாதிபதியின் சிரேஸ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரஸல் அபோன்சு, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் நிதி அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

 

 

blank blank

 

நன்றி

Leave a Reply