புதிய கல்வி சீர்திருத்தத்தை (Education reform) ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்ற விடயமாகும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று (24) தெரிவித்தார்.
எனவே, மேற்படி திட்டம் குறித்து மீளாய்வு செய்து உரிய முடிவு எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் பரிந்துரைத்தார்.
ஹெம்மாத்தகம பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய சஜித் பிரேமதாச, இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
“மக்களினதும், பாடசாலை மாணவர்களினதும் மனநிலைகள் குறித்து நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்களினது மனித மற்றும் அடிப்படை உரிமைகளை மீறக் கூடாது.
பாடசாலைக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு அரசாங்கத்திடம் முறையான திட்டமொன்று இல்லாததால் மாணவர்களே பாதிக்கப்படுகின்றனர்.
அரசாங்கத்தின் திட்டத்தின் பிரகாரம் ஜனவரி மாதம் முதல் புதிய சீர்திருத்தங்களை அமுல்படுத்துவது நடைமுறைக்கு சாத்தியமற்றது. எனவே, இது குறித்து மீள்பரிசீலனை செய்து தீர்மானம் எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) இணக்கப்பாட்டை திருத்தியமைப்பதற்குரிய பேச்சு முன்னெடுக்கப்பட வேண்டும்.” – என்றார் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச.
