2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!

தங்கள் வீரர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக, 2026 உலகக் கிண்ணப் போட்டிகளை அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவிற்கு மாற்றுவது குறித்து ஈரான் சர்வதேச கால்பந்து கூட்டமைப்புடன் (FIFA) ⁠பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஈரான் கால்பந்து தலைவர் மெஹ்தி தாஜ் திங்களன்று (16) தெரிவித்தார்.

இணை-நடத்தும் நாடான அமெரிக்கா, இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது கூட்டு வான்வழித் தாக்குதல்களை நடத்தியதை அடுத்து, உலக கால்பந்துப் பெருந்தொடரில் அதன் பங்கேற்பு கேள்விக்குறியாகியுள்ளது.

போட்டியில் ஈரானின் பங்கேற்பதை வரவேற்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் கூறினார்.

ஆனால் அவர்களின் பாதுகாப்பு கருதி ஈரானிய வீரர்கள் அமெரிக்காவில் விளையாடுவது பொருத்தமானதாக இருக்காது என்றும் குறிப்பிட்டார்.

ஈரானிய தேசிய அணியின் பாதுகாப்பை தன்னால் உறுதி செய்ய முடியாது என்று ட்ரம்ப் வெளிப்படையாகக் கூறியுள்ள நிலையில், நாங்கள் நிச்சயமாக அமெரிக்காவுக்குப் பயணம் செய்ய மாட்டோம் என்று மெக்சிகோவில் உள்ள ஈரானிய தூதரகத்தின் எக்ஸ் கணக்கில் மெஹ்தி தாஜ் பதிவிட்டுள்ளார்.

மேலும், ஈரானின் உலகக் கிண்ணப் போட்டிகளை மெக்சிகோவில் நடத்துவது குறித்து நாங்கள் FIFA-வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், கால்பந்தின் உலகளாவிய நிர்வாக அமைப்பான FIFA, இதுகுறித்த கருத்துக்கான கோரிக்கைக்கு உடனடியாகப் பதிலளிக்கவில்லை.

நன்றி

Leave a Reply