2026 T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி குறித்து சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் அறிக்கை!

இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து அடுத்த ஆண்டு நடத்தும் T20 ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் பூர்வாங்க ஏற்பாடுகள் குறித்து சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்தியாவின் அகமதாபாத், டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை ஆகிய நகரங்களை மையமாகக் கொண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.

இலங்கையில் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும், கொழும்பு ஆர். பிரேமதாச மற்றும் பல்லேகல மைதானங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

T20 உலகக் கிண்ணம் பெப்ரவரி 7 ஆம் திகதி ஆரம்பமாகி, இறுதிப் போட்டி மார்ச் 8 ஆம் திகதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

ICC வழிகாட்டுதலின்படி, போட்டித் தொடர் ஆரம்பிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் போட்டி அட்டவணை வெளியிடப்பட வேண்டும்.

அதன்படி, இது பெரும்பாலும் எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்பட வாய்ப்புள்ளது.

இந்திய கிரிக்கெட் சபைக்கும் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கும் இடையில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளில் ஒன்று தொடரை நடத்தும் போது, மற்றைய நாடு நடுநிலை இடத்தில் விளையாடும்.

இதன் காரணமாக, பாகிஸ்தான் தனது அனைத்துப் போட்டிகளையும் இலங்கையில் விளையாடும்.

பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால், இறுதிப் போட்டியும் இலங்கையிலேயே நடைபெறும்.

இந்த முறை போட்டித் தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு விளையாடவுள்ளன.

ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

சூப்பர் 8 சுற்றில், அணிகள் தலா 4 வீதம் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு விளையாடவுள்ளன.

அந்த இரண்டு குழுக்களிலும் முன்னிலை வகிக்கும் தலா இரண்டு அணிகள் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.

நன்றி

Leave a Reply