ஒரு மருந்து உற்பத்தி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து குறைந்தது 21 குழந்தைகளின் இறப்புக்குக் வழிவகுத்தது என்று கூறப்பட்டதை அடுத்து, இந்தியப் பொலிஸார் குறித்த நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்துள்ளனர்.
அதன்படி, 75 வயதான ஜி. ரங்கநாதன், என்பவர் இன்று (09) அதிகாலை சென்னையில் உள்ள அவரது வீட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது கொலைக்கு சமமான குற்றச்சாட்டுகள் மற்றும் மருந்துக் கலப்படம் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் சிரப்கள் அண்மைய ஆண்டுகளில் உலகளாவிய ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
பல நாடுகளில் அவற்றின் நுகர்வு தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன.
இது மருந்துகளின் மூன்றாவது பெரிய உற்பத்தியாளர் என்ற இந்தியாவின் நற்பெயருக்கு கலங்கம் விளைவித்துள்ளது.
இந்த நிலையில் கோல்ட்ரிஃப் (Coldrif) என்ற பிராண்ட் பெயரில் விற்கப்படும் மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய இந்த இருமல் சிரப், தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ‘ஸ்ரீசன் பார்மா’ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
இந்திய சுகாதார அமைச்சு சனிக்கிழமை சிரப் மாதிரிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், இருமல் மருந்தில் பரிந்துரைக்கப்பட்ட வரம்பை விட அதிக அளவில் டைதிலீன் கிளைகோல் (DEG) என்ற நச்சு இரசாயனம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொழில்துறை கரைப்பான்களில் பயன்படுத்தப்படும் ஒரு நச்சுப் பொருளாகும்.
இது சிறிய அளவில் உட்கொண்டாலும் ஆபத்தானது.
மத்தியப் பிரதேசம் மற்றும் பல மாநிலங்கள் இந்த தயாரிப்பைத் தடை செய்துள்ளன.
இந்த நச்சு இருமல் சிரப் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதா என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் இந்திய அதிகாரிகளிடம் விளக்கம் கோரியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
2022 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இருமல் சிரப்பை உட்கொண்ட பின்னர் காம்பியாவில் 70 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையான சிறுநீரக செயலிழப்பால் இறந்தனர்.
உஸ்பெகிஸ்தானில், 2022 மற்றும் 2023 க்கு இடையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மற்றொரு மாசுபட்ட சிரப்பை உட்கொண்ட பின்னர் 68 குழந்தைகள் இறந்தனர்.