சுகாதாரத் துறை, 5 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்க வேண்டாம் என எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட Coldrif என்ற இருமல் மருந்தில் நச்சுப்பொருள் அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் அந்த மருந்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
அனைத்து ரீடெயில் கடைகள், டிஸ்ட்ரிப்யூட்டர்கள் மற்றும் சுகாதார மையங்களில் இருக்கும் மீதமுள்ள Coldrif இருமல் மருந்துகளை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஹரியானா மாநிலத்தின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தினர் பல்வேறு மருந்தகங்கள் மற்றும் ஹோல்சேலர்களிடம் திடீர் சோதனை நடத்தி, 31 மாதிரிகளை சேகரித்துள்ளனர்.
மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தவறான இருமல் மருந்து எடுத்த குழந்தைகள் பலர் உயிரிழந்த சம்பவத்தின் பின்னர், சுகாதாரத்துறை இத்தகைய கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
மருத்துவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான வழிமுறைகள்
5 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இருமல் மருந்து வழங்கக் கூடாது.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இருமல் மற்றும் சளி போன்றவை எந்த மருந்தும் இல்லாமல் தாமாகவே குணமடையும்.
மருந்து எடுத்த பிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்டால், பெற்றோர்கள் உடனடியாக அருகிலுள்ள சுகாதார மையத்தை அணுக வேண்டும்.
மருந்து கடைகள், சரியான பிரிஸ்கிரிப்ஷன் இல்லாமல் இருமல் மருந்துகளை விற்பனை செய்யக் கூடாது.
மேலும், அரசு மற்றும் தனியார் சுகாதார மையங்கள் இன்ஃப்ளூயன்சா, தீவிர நுரையீரல் தொற்று, மருந்துகள் காரணமாக ஏற்படும் அசாதாரண விளைவுகள் போன்றவற்றை ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம் (IDSP) மற்றும் ஒருங்கிணைந்த சுகாதாரத் தகவல் தளம் (IHIP) வழியாக புகார் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெற்றோர்களுக்கான முக்கிய அறிவுரை:
மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் குழந்தைகளுக்கு எந்த மருந்தையும் வழங்கக் கூடாது. அதேபோல் பெரியவர்களும் கூட சுயமாக மருந்து எடுத்துக் கொள்வதைத் தவிர்க்குவது உடல்நலத்திற்கும் பாதுகாப்பிற்கும் முக்கியம்.