இலங்கையில் நடைமுறையில் உள்ள எரிபொருள் கோட்டா (quota) திட்டத்திற்காக பொதுமக்கள் பதிவு செய்யும் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தத் தகவல்களுக்கு அமைவாக, இதுவரை மொத்தமாக 5.6 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த முறைமைக்காக பதிவு செய்துள்ளனர். குறிப்பாக மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து தினசரி பதிவுகளின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
ஒரு நாளில் மட்டும் 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் புதியதாக பதிவு செய்துள்ள நிலையில்,
- மார்ச் 15 அன்று 42,899 பேர்,
- மார்ச் 16 அன்று 337,068 பேர்,
- மார்ச் 17 அன்று 395,349 பேர்,
- மார்ச் 18 அன்று 301,463 பேர்
என புதிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த வளர்ச்சி, நாட்டின் எரிசக்தி மேலாண்மை முறைமைக்கு பொதுமக்கள் வழங்கும் ஒத்துழைப்பையும், அதன் தற்போதைய முன்னேற்றத்தையும் தெளிவாக காட்டுகிறது.
மேலும், QR குறியீட்டு (QR Code) முறை பயன்பாட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது, இலங்கையின் டிஜிட்டல் மாற்ற முயற்சியில் இது ஒரு முக்கிய கட்டமாக கருதப்படுகின்றது.

