இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி நேற்று (07.08.2025) மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு, மீள பெற முடியாத வகையில் சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வை வலியுறுத்தும் வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் மூன்றாவது ஆண்டு தொடர்ச்சியும் மற்றும் அதனுடன் தொடர்புடைய கவன ஈர்ப்பு போராட்டமானது 100 நாள் செயல்முறையில் 7வது நாளான நேற்று மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அந்தோனியார்புரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது, “சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வே தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய ஒரே தீர்வாகும்” என ஒரே கோசத்துடன் மக்கள் கலந்துகொண்டு வலியுறுத்தியிருந்தனர்.
தமிழர்களின் அரசியல் உரிமைகள் மீதான கவனம் மறுபடியும் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் ஈர்க்கப்பட வேண்டும் என்பதே குறித்த போராட்டத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டது.
தொடர்ச்சியாக 100 நாட்கள் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் சுழற்சி முறையில் குறித்த தரப்பினரால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.