49
இலங்கையில் தற்போதுள்ள பேரழிவு நிலைமை தொடர்பாகவும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்தும், ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக குற்றவியல் வழக்கு தொடரப் போவதாக எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தி யின் நாடாளுமன்ற உறுப்பினர் S.M. மரிக்கார் இந்த தகவலை வெளியிட்டுள்ளாா்.
தற்போதைய பேரிடர் நிலைமை, 2019ஆம் ஆண்டு நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைப் போலவே மிகவும் தீவிரமான ஒரு சம்பவம் என வலியுறுத்தியுள்ள அவர் நாட்டை திவால் நிலைக்குத் தள்ளிய ராஜபக்ஷக்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டதைப் போலவே, தற்போதைய அரசாங்கத்திற்கும் எதிராக நிச்சயம் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என உறுதி அளித்துள்ளாா்.
பேரழிவில் உயிரிழந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசாங்கமே முழுப் பொறுப்பு எனவும் பேரிடர் குறித்த முன்கூட்டிய எச்சரிக்கைகள் வழங்கப்பட்டபோதிலும், அரசாங்கம் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் எனவும் S.M. மரிக்கார் குற்றம் சாட்டியுள்ளார்.
