106
மனிதர்களின் வாழ்க்கையை வடிவமைப்பதில் அவர்களது தாய்மொழியிலான அறிவுருவாக்கம் அடிப்படையானதாக இருந்து வருகிறது. தாய்மொழி மூலமான கல்வி அதனூடான அறிவுருவாக்கம் என்பன வினைத்திறன் கொண்டது என்பதும் துறைசார் அறிஞர்கள், நிபுணர்களது அழுத்தமான நிலைப்பாடும் ஆகும் .
ஆயினும் மனிதர்களது அறிவுத்தேடல் அறிவுருவாக்கம் என்பன அவர்களது தாய்மொழிக்குள் மட்டும் சுருங்கி கிடப்பதும் அல்ல.
நடைமுறையில் இருக்கின்ற அறிவுருவாக்கத்தையும், அதன் காரணமான அறிவுத் தேட்டத்தையும் மேலும் ஆழ- அகலப்படுத்தும் நோக்கில் பிற மொழிகளைக் கற்று, அதில் பாண்டித்தியமும் பெற்று அம் மொழிகளில் செறிந்து கிடக்கின்ற அறிவு முறைகளை, அறிவு மரபுகளை உள்வாங்கிக் கொள்வது ஒவ்வொரு மொழியை பேசுகின்ற மக்களதும் அடிப்படை இயல்பாகவும் திகழ்ந்து வருகின்றது.
அதேவேளை வாளாலும், துப்பாக்கியாலும் மொழிக் காலனியாதிக்கத்தை ஏற்படுத்துவதும் வரலாற்றிலும் காணமுடிகிறது, இது அன்றாட வாழ்விலும் எதிர்கொள்ளப்படுவது யதார்த்தமாக இருக்கின்றது.
பிற மொழிகளை கற்றல் என்பது இருவகை நோக்கங்களைக் கொண்டதாக இருக்கின்றது. ஒன்று, மேலே குறிப்பிட்டது போல ஆக்கபூர்வமான அறிவுருவாக்கத்துடன் சம்பந்தப்பட்டது. மற்றையது, பிற சமூகங்களை கட்டுப்படுத்துவதற்கான நோக்குடையதாகவும் காணப்படுகிறது. குறிப்பிட்ட சமூகங்களது மொழிகளை கற்றலினூடாக அவர்களது சிந்தனை மரபுகளை அவற்றின் சிந்தனை முறைகளை விளங்கிக் கொள்வதில் மூலமாக அவர்கள் மீது மேலாதிக்கம் செலுத்தும் வழிமுறைகளுக்கு கூடாக கட்டுப்படுத்தல்களையும் சிதைப்புகளையும் கொண்டு வருவது.
மேற்கு ஐரோப்பிய காலனியாதிக்கம் காரணமாக, எமது சூழலைப் பொருத்தவரையில் குறிப்பாக பிரித்தானிய காலனியாதிக்கம் காரணமாக நவீனமயமாக்கம் என்ற பெயரிலும், குறிப்பாக கல்வி சார்ந்து அறிவொளி இயக்கம் என்ற முன்னெடுப்பின் மூலமும் பிரித்தானிய காலனியாதிக்கமே நிகழ்த்தப்பட்டு வருகிறது.
பிரித்தானிய காலனியாதிக்கத்திற்கு முன்னரான அறிவுருவாக்க முறைகள் எமது நடைமுறை நவீன அறிவுச் சூழல் என்று கொள்ளப்படுகின்ற இடங்களில் அறிவுப்பூர்வமற்றவை, விஞ்ஞான பூர்வமாக மேற்கு ஐரோப்பிய உருவாக்கங்களான ஆய்வுக்கூடங்களில் நிரூபிக்கப்படாதவை என்று நிராகரிக்கப்படுபவையாகவும்; பாரம்பரியம் என்ற பெயரில் கடந்த காலத்திற்குரியவையாக மட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலைமையே காணப்படுகிறது.
எமது நோக்கிலான மாற்றங்களுக்கான எந்தவிதமான ஒளிக்கீற்றுகளும் தென்படாது இருப்பது சிந்திக்கப்பட வேண்டியது. மாறாக, மேலும் மேலும் தொழிற்சந்தைக்கு தயார்படுத்தல் என்ற பெயரில் தாராளவாத பொருளாதார நலன்களுக்கு கதவுகளைத் திறந்து நவகாலனிய சூழலுக்கு ஏற்ப தகவமைப்பதே விரும்பி ஏற்கும் வகையில் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டு வருகிறது.
இத்தகையதொரு பின்னணியில் உலகமொழிபெயர்ப்பு தினம் (செப்டம்பர் 30) கவனம் பெறுகிறது.
தமிழ்கூறும் நல்லுலகில் மொழிபெயர்ப்பு வழியிலான அறிவுருவாக்கத்தில் ஈழத்தமிழர்களது பங்கு தனித்துவமுடையது. ஆயினும் இதுவொரு தொகுக்கப்பட்ட பார்வைக்கூடாக மதிப்பிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வரலாறு நீண்டது. இன்றைய நிலையில் இன்னும் பரந்து விரிந்ததாகக் காணப்படுகிறது.
மிகப்பெரும்பாலும் தன்னார்வம் கொண்ட ஈழத்தமிழர்களால் இவை நிகழ்த்தப்பட்டு வருகின்றன என்பதும் கவனிக்கத்தக்கது.
தமிழறிவுலகிற்கு ஈழத்தமிழர்கள் பல்வேறு மொழிக்கதவுகளை திறந்து விட்டிருக்கிறார்கள், திறந்து வருகிறார்கள். இதன் ஓட்டத்தில் அகராதி உருவாக்கமும் நிகழ்த்தப்பட்டு வருவதும் குறிப்பிட வேண்டியது.
பிறமொழிகளில் இருந்து தமிழுக்குக் கொண்டு வருவதும், தமிழிலிருந்து பிறமொழிகளுக்கு கொண்டு செல்வதுங்கூட நிகழ்ந்து வருகிறது.
இவை தொகுக்கப்பட்ட பார்வைக்குள் கொண்டுவரப்படுவதும்; இதனை மேலும் வலுவாக முன்னெடுப்பதும் முக்கிய தேவையாகும்.
உலக மொழிபெயர்ப்பு தினத்தை முன்வைத்து மேற்படி செயற்பாட்டைத் தொடக்கும் வகையில் மூன்றாவது கண் உள்ளூர் அறிவு திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழாம் மூன்றாவது கண் மொழிபெயர்ப்பு என்ற செய்தி மடலை வெளியிடத் தொடங்குகிறது.
அத்துடன் உலக மொழிபெயர்ப்பு தினத்தில் மேற்படி விடயம் சார்ந்த கலந்துரையாடலையும் நிகழ்த்துகிறது.
மேலும் ஈழத்து அறிஞர்தம் மொழிபெயர்ப்புகள், பதிவுகள், பதிப்பாளர்கள் சார்ந்த புத்தகத் திருவிழாவிற்கும் தயாராகி வருகிறது.
தமிழ்கூறும் நல்லுலகின் தமிழறிவுருவாக்கத்திற்கு வாழ்வளித்துள்ள அறிஞர் பெருமக்களை அவர்தம் ஆக்கங்களை அறிவோம், பகிர்வோம், மதிப்பிடுவோம், கொண்டாடுவோம் முன்செல்லவோம்.
முன் செல்வோம் நாங்கள்
முன் செல்வோம் நாங்கள்
தமிழறிவு விரிவாக
முன் செல்வோம் நாங்கள்
மொழிபெயர்ப்பின் வழிவளர
முன் செல்வோம் நாங்கள்
எல்லோரும் வாழ
தமிழறிவு வளர்க்க
எல்லாமும் வாழ
தமிழறிவு வாழ்க
முன் செல்வோம் நாங்கள்
முன் செல்வோம் நாங்கள்
பேராசிரியர் சி. ஜெயசங்கர்