மதுரை: திருச்சி அருகே அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பிரச்சாரக் கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வேன் ஓட்டுநர் தாக்கப்பட்ட வழக்கில் நிர்வாகிகள் 4 பேருக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் துறையூரில் பழனிசாமி பங்கேற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது அந்த இடத்தை கடக்க முயன்ற 108 ஆம்புலன்ஸ் தடுத்து நிறுத்தப்பட்டு, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்டார். இது தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த 10 பேர் மீது துறையூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் துறையூரைச் சேர்ந்த பாலமுருகவேல் என்ற அமைதி பாலு, விக்கி என்ற விவேக், தீனதயாளன், கலிங்கமுடையான்பட்டியைச் சேர்ந்த பொன் காமராஜ் ஆகிய நிர்வாகிகள் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன்கோரி மனுத்தாக்கல் செய்தனர். அதில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, துறையூர் பேருந்து நிலையம் அருகே ஆக.24 அன்று மாலை பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அப்போது அப்பகுதிக்கு வந்த 108 ஆம்புலன்ஸையும் அதன் ஓட்டுநரையும் தாக்கியதாக துறையூர் காவல் நிலைய போலீஸார் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். எங்களுக்கும் ஆம்புலன்ஸ் தாக்கப்பட்ட சம்பவத்துக்கும் தொடர்பில்லை. எனவே, முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி எஸ்.மதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், பழனிசாமியின் பொதுக் கூட்டங்களுக்கு வேண்டும் என்றே ஆம்புலன்ஸ்களை அனுப்பி வைத்து இடையூறு செய்கின்றனர் என வாதிடப்பட்டது. இதற்கு அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி, மனுதாரர்கள் 4 பேருக்கும் இடைக்கால முன்ஜாமீன் வழங்கி, மனு தொடர்பாக துறையூர் காவல் ஆய்வாளர் பதில ளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.8-க்கு தள்ளிவைத்தார்.