
பிரித்தானியா மற்றும் சீனா இடையிலான அண்மைய உயர் மட்ட சந்திப்புகளைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இங்கிலாந்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். போட்டி வல்லரசான சீனாவுடன் இங்கிலாந்து நெருக்கமான உறவுகளைத் தொடர்வது “மிகவும் ஆபத்தானது” என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பெய்ஜிங்கிற்கு பயணம் செய்த முதல் பிரித்தானிய பிரதமராக கியர் ஸ்டாமர் இந்த விஜயத்தை மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது, விசா வசதிகள் முதல் மேம்பட்ட சந்தை அணுகல் வரை சுமார் 13 பில்லியன் பெறுமதியான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், இதே நேரத்தில் அமெரிக்கா உடனான பொருளாதார உறவுகளை மறுசீரமைக்கும் நோக்கில் ஸ்டாமர் மேற்கொண்ட முயற்சிகள் எதிர்பார்த்தளவு முன்னேற்றம் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக ட்ரம்பின் கணிக்க முடியாத அரசியல் அணுகுமுறை மற்றும் சீனாவை நோக்கிய அவரது நீண்டகால விரோதப் போக்கு, இங்கிலாந்துக்கு எதிர்காலத்தில் பெரும் அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை உருவாக்கக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இதற்கிடையில், ஸ்டாமரின் சீன விஜயம் மற்றும் அதனூடாக இங்கிலாந்து எடுத்துக்கொண்ட நோக்கங்கள் குறித்து அமெரிக்கா முன்கூட்டியே அறிந்திருந்ததாக, அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இதனால், இங்கிலாந்து–அமெரிக்கா–சீனா இடையிலான உறவுகளில் புதிய அரசியல் பதற்றம் உருவாகும் சூழல் காணப்படுகிறது.
