இந்திய டெஸ்ட் அணியின் புதிய துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, இந்திய அணிக்குக் தலைவராக வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? என்ற கேள்விக்கு மனம் திறந்து பதில் அளித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா, அஸ்வின், விராட் கோலிக்கு அடுத்த கட்டமாக மூத்த வீரராக இருந்த ரவீந்திர ஜடேஜா இதுவரை டெஸ்ட் அணியின் தலைவராக செயல்பட்டதில்லை.
இந்நிலையில், ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து கடந்த மே மாதம் ஓய்வு பெற்றபோது இந்திய அணியின் அடுத்த தலைவர் யார் என்ற விவாதம் தீவிரமாக எழுந்தது.
அப்போது, முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜாவை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குக் தலைவராக நியமிக்கலாம் என்று தனது கருத்தை முன்வைத்தார்.
இந்த நிலையில், ரிஷப் பண்ட் காயமடைந்ததால், மேற்கிந்திய அணிக்கு எதிரான இந்தத் தொடருக்கு ஜடேஜா துணை துணை தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்தச் சூழலில், மேற்கிந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், கேப்டன் ஆகும் இலட்சியம் இன்னும் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு உடனடியாகப் பதிலளித்த ஜடேஜா, “இல்லை , நான் அதைப்பற்றி இப்போது சிந்திப்பது கூட இல்லை. அந்தக் காலம் எல்லாம் மலையேறிப் போய்விட்டது. இப்போது, அணிக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
