இந்திய சுதந்திரத்திற்காக உயிர் கொடுத்த, முஸ்லிம் வீரனின் உருக்கமான வார்த்தைகள்


– Syed Ali –

செப்டம்பர் ஒன்பதாம் தேதி, இரவு நேரம். இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் இணைந்து பணியாற்றியதற்காக பிரிட்டிஷ் படையினரால் பிடிபட்ட சில போராளிகளைத் தூக்கிலிடப் போவதற்கு முந்தைய நாள்.

மறுநாள் தூக்கிலிடப்படவுள்ள 26 வயதான கேரளாவைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் இளைஞன், தனது அறையில் அமர்ந்து தனது தந்தைக்கும், தன்னுடன் சிறையில் உள்ள தனது நண்பருக்கும் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தான். 

அசைக்க முடியாத துணிச்சலுடன் மரணத்தை எதிர்கொண்ட அந்த வீரப் போராளி, தனது தந்தைக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தான்:

“அன்புள்ள தந்தையே, நான் உங்களை நிரந்தரமாக விட்டுப் பிரிகிறேன். நாளை காலை ஆறு மணிக்கு முன்னதாகவே நான் இறந்துவிடுவேன். தைரியமாக இருங்கள். ஆம், ரமலான் மாதத்தின் ஏழாம் நாள், வெள்ளிக்கிழமை அன்று காலை ஐந்து மணிக்கும் ஆறு மணிக்கும் இடையில் நான் இறப்பேன்.

மதிப்பிற்குரிய தந்தையே! பாசத்திற்குரிய தாயே!

மிகவும் அன்பான சகோதர, சகோதரிகளே!

உங்களுக்கு ஆறுதல் சொல்ல எனக்கு எதுவும் இல்லை. நான் உங்களை விட்டுப் பிரிகிறேன். மறுமையில் நாம் மீண்டும் சந்திப்போம். என்னைப் பற்றி வருந்தாதீர்கள். எனது வாழ்க்கையின் நாடகத்தை நடித்து முடிக்க இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. 

நான் எவ்வளவு தைரியத்துடனும், மகிழ்ச்சியுடனும், அமைதியுடனும் இறந்தேன் என்பதை ஒரு சந்தர்ப்பத்தில் சில சாட்சிகள் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள நேரும்போது, நீங்கள் நிச்சயமாக மகிழ்ச்சியடைவீர்கள். மேலும், நீங்கள் பெருமிதம் கொள்வீர்கள்.”

தனது தோழனுக்கு எழுதிய கடிதத்தில் அந்த வீரன் இவ்வாறு  எழுதினான்:

“நமது மரணம் மற்ற பலரின் பிறப்புக்கு வழிவகுக்கும்.

ஏற்கனவே பல வீரர்கள், மகாத்மாக்களான இந்திய புத்திரர்கள், தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக அனைத்தையும் தியாகம் செய்தவர்கள் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்துவிட்டனர்.

அவர்களுடன் ஒப்பிடும்போது, நாம் முழு நிலவுக்கு முன்னால் எரியும் வெறும் மெழுகுவர்த்திகளே.”

உயர்ந்த மதிப்புகள் மற்றும் எல்லையற்ற தேசபக்தியால் பொங்கி எழும் இந்த இரண்டு கடிதங்களையும் எழுதி முடித்தபின், மறுநாள் காலை, அவன் உறுதியுடன் தூக்கு மேடையை நோக்கி நடந்தான்.

பிரிட்டிஷார் அவனிடம் கடைசியாக ஏதேனும் ஆசைகள் உள்ளதா என்று கேட்டபோது, அவன் இவ்வாறு பதிலளித்தான்:

“இந்திய மக்களை இந்துக்கள், முஸ்லிம்கள் என்று பிரிக்கும் முயற்சியில் நீங்கள் ஈடுபட்டிருக்கிறீர்கள்.

எங்களைத் தூக்கிலிடும்போது, இந்த நாட்டின் இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் சின்னமாக, எங்களில் உள்ள ஒரு இந்துவையும் ஒரு முஸ்லிமையும் ஒன்றாகத் தூக்கிலிடுங்கள்.”

பிரிட்டிஷார் அதை ஏற்றுக்கொண்டனர். புன்னகையுடன் அவன் தூக்கு மேடையில் ஏறினான்.  சிறை வளாகம் 

“ஏகாதிபத்தியம் ஒழியட்டும்! பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வரட்டும்!”

முதலான உரத்த முழக்கங்களால்  அதிர்ந்தது.

1943 செப்டம்பர் பத்தாம் தேதி, ரமலான் மாதத்தின் ஏழாம் நாள், வெள்ளிக்கிழமை அன்று அந்த வீர தேசபக்தர்கள் வீரமரணம் அடைந்தனர். 26 வயதில் தூக்கிலிடப்பட்ட, இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிகவும் பிரகாசமான அந்த இளைஞனின் பெயர் வக்கம் அப்துல் காதர்.

நாம் பள்ளியில் படித்த சமூக அறிவியல் பாடப் புத்தகங்களில் வக்கம் அப்துல் காதர் என்ற பெயரை நாம் பார்க்கவில்லை. நாம் மதிக்கும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பட்டியலிலும் வக்கம் காதர் என்ற பெயர் இடம் பெறவில்லை. அவரது பெயரில் வரலாற்று நினைவுச் சின்னங்கள் இல்லை, சாலைகள் இல்லை, கட்டிடங்கள் இல்லை. அவரது நினைவு தினத்தை கடைப்பிடிக்கவும் யாரும் இல்லை.

நன்றி

Leave a Reply