இந்தியா – தென்னாப்பிரிக்கா டெஸ்டில் காந்தி-மண்டேலா உருவம் பொறித்த தங்க நாணயம் அறிமுகம்!

கொல்கத்தா: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 14 அன்று கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் போடுவதற்காக, மகாத்மா காந்தி மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்ட பிரத்தியேகமான சிறப்புத் தங்க நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அமைதி மற்றும் அகிம்சையின் உலகளாவிய அடையாளங்களாக விளங்கும் இருபெரும் தலைவர்களான மகாத்மா காந்தி மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோரைப் போற்றும் விதமாக இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடருக்காகவே இந்த நாணயம் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளதாக வங்காள கிரிக்கெட் சங்கத்தின் (CAB) தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

நாணயத்தின் ஒருபுறம் மகாத்மா காந்தியின் உருவமும், மறுபுறம் நெல்சன் மண்டேலாவின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. இது அமைதி, சுதந்திரம் மற்றும் அகிம்சையின் செய்தியைப் பறைசாற்றும் என்று கங்குலி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா-தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரானது, ‘சுதந்திரக் கோப்பை’ (Freedom Trophy) என்ற பெயரில் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இது காந்தி மற்றும் மண்டேலாவின் சுதந்திரப் போராட்ட பங்களிப்பைக் கௌரவிப்பதற்காக இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சிறப்பு நாணயம், அந்தக் கௌரவத்தின் நீட்சியாக மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தொடரை முடித்துக்கொண்டு, கேப்டன் சுப்மன் கில், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி கொல்கத்தா வந்தடைந்தது.

போட்டிக்கு முன்னதாக, தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரும், கங்குலியும் ஈடன் கார்டன்ஸ் ஆடுகளத்தை ஆய்வு செய்தனர். ஆடுகளத்தைப் பார்த்த கங்குலி, “இது ஒரு நல்ல ஆடுகளமாகத் தெரிகிறது” என்று குறிப்பிட்டார்.

சமீபத்தில் டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து, போட்டி நடைபெறும் பகுதியில் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்திற்கு டெஸ்ட் கிரிக்கெட் திரும்புவதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் கிட்டத்தட்ட விற்றுத் தீர்ந்துவிட்டன. இதுவரை 96,000 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாக வங்காள கிரிக்கெட் அமைப்பின் பொருளாளர் சஞ்சய் தாஸ் கூறியுள்ளார்.

போட்டிக்கு முன்னதாக, நவம்பர் 13 அன்று ஜக்மோகன் டால்மியா நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் சிறப்புரையாற்றவுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

நன்றி

Leave a Reply