புதுடெல்லி: இந்தியாவில் முதலீடு செய்யவும், புதுமைகளை உருவாக்கவும் இதுவே சரியான நேரம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள யசோ பூமியில் இந்திய மொபைல் மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
மேக் இன் இந்தியா திட்டத்தில் மொபைல் போன்கள், செமிகண்டக்டர், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட் பல்வேறு துறைகளில் வளர்ச்சி மற்றும் சீர்திருத்தங்களின் வேகத்தை அரசு துரிதப்படுத்தி வருகிறது.
இந்தியாவில் முதலீடு செய்யவும், புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் இதுவே சிறந்த சரியான நேரம். இந்தியாவின் ஜனநாயக அமைப்பு, அரசின் வரவேற்கத்தக்க அணுகுமுறை மற்றும் வணிகம் செய்வதற்கான எளிமை ஆகியவை முதலீட்டாளர்களின் நட்பு மிகுந்த நாடு என்ற பிம்பத்தை நம்நாடு அடைய உதவியுள்ளன.
இந்தியா கடந்த தசாப்தத்தில் டிஜிட்டல் துறையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை எட்டியுள்ளது. 1 ஜிபி டேட்டா ஒரு கப் தேநீரின் விலையை விட மலிவானதாக மாறியுள்ளது.
ஒரு காலத்தில் 2ஜி உடன் போராடிய நமது நாடு, இன்று 5ஜி சேவை கிட்டத்தட்ட ஒவ்வொரு மாவட்டத்தையும் சென்றடையும் அளவுக்கு முன்னேறியுள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் இணைப்பு என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும் ஒருங்கிணைந்த அங்கமாகும்.
நிதிசார் மோசடி பாதுகாப்பு, குவாண்டம் தகவல் தொடர்பு, 6ஜி அலைக்கற்றை சேவை, கண்ணாடி இழை தகவல் தொடர்பு, செமிகண்டக்டர் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த கருப்பொருள்களில் புத்தொழில் நிறுவனங்கள் எண்ணற்ற செயல்திட்டங்களை வழங்கியுள்ளன.
மொபைல், தொலைத்தொடர்பு, மின்னணுவியல் உள்ளிட்ட ஒட்டுமொத்த தொழில்நுட்ப சூழலில் ஏற்படும் சிக்கல்களுக்கு உலக நாடுகளுக்கு தீர்வு வழங்க இந்தியாவுக்கு சிறப்பான வாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.