மன்னார் பிரதேச செயலக பிரிவில் உள்ள தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடற்கரை பூங்காவானது மன்னார் பிரதேச சபையின் பராமரிப்பில் நீண்ட காலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வட மாகாணத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட கடற்கரை பூங்கா மன்னார் பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டு குறித்த இடம் மன்னார் பிரதேச சபையின் கண்காணிப்பிலேயே இதுவரை காலமும் இருந்து வந்தது.
2015 ஆம் ஆண்டு குறித்த கடற்கரை பூங்கா பகுதி வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு உட்பட்ட பகுதியாக கொண்டு வரப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் ஏற்கனவே எதிர்ப்பையும் தெரிவித்திருந்ததாக தெரிய வருகிறது.
இந்நிலையில் அதிகளவு சுற்றுலா பயணிகள் இராமர் பாலத்தை பார்க்க வரும் சந்தர்ப்பத்தில் படகு சேவை ஒன்றை முன்னெடுக்க மன்னார் பகுதியின் மக்கள் கோரிக்கை முன்வைத்ததுடன் அரச மட்ட தரப்பிலும் குறித்த கோரிக்கை பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டங்களின் கலந்துரையாடப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு படகு சேவை மேற்கொள்ள முடிவுகள் முன்னெடுக்கப்பட்டது.
இதற்கான அனுமதி பெறப்பட்டு படகு சேவை முன்னெடுக்கப்பட உள்ளது.
இந்நிலையில் படகு சேவை கட்டண வசூலிப்பை வன ஜீவராசிகள் திணைக்களம் முன்னெடுக்க உள்ளது. குறித்த நடவடிக்கை தொடர்பாக மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் உட்பட உறுப்பினர்களுடன் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை (8) மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தின் அரசாங்க அதிபரின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
படகு சேவைக்கான கட்டண வசூலிப்பை 50க்கு 50 என்றதன் அடிப்படையில் வன ஜீவராசிகள் திணைக்களமும் மன்னார் பிரதேச சபையும் செயற்பட்டு சுற்றுலா பயணிகள் சேவையை நடைமுறைப்படுத்தலாம் என தெரிவித்து இதர வருமானங்கள் மன்னார் பிரதேச சபை திட்டங்கள் வகுத்து செயல்படுத்தலாம் என்று அரச அதிபர் தனது உரையில் தெரிவித்தார்.
கலந்து கொண்ட தலைமன்னார் ஊர்மனை கிராமத்தின் உறுப்பினர் மற்றும் சில உறுப்பினர்கள் மன்னார் பிரதேச சபை கடற்கரை பூங்காவை நீண்ட நாட்களாக பராமரித்து வரும் நிலையில் மன்னார் பிரதேச சபையின் வருமானம் மிகக் குறைவானது என்றும் இன்னும் பல்வேறு காரணங்களை வலியுறுத்தி படகு சேவைக்கான நிதி வசூலிப்பை தமக்கு தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும் அவ்வாறு செயல்பட முடியாது. வன ஜீவராசிகள் திணைக்களம் பல்வேறு இடங்களில் இவ்வாறான சுற்றுலா நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. தமக்கு உட்பட்ட பகுதியில் குறித்த கடற்கரை பூங்கா காணப்படுவதனால் திணைக்களத்தின் சட்ட நடவடிக்கைக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என வனஜீவராசிகள் திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அதிகாரி பாத்தியா மடுகள்ல தெரிவித்தார்.
இதன்போது மன்னார் பிரதேச சபை தவிசாளர் குறித்த கருத்தை ஆதரித்தும். கலந்து கொண்ட உறுப்பினர்கள் சிலர் மன்னார் பிரதேச சபை நிதி தொடர்பில் அதிருப்தி குறித்து தற்போது இவ்வாறான கருத்தை தாம் அனுமதிக்க முடியாது, முன்பு இவ்வாறு தான் காற்றாலை திட்டத்திற்கும் பல ஆசை வார்த்தைகள் கூறி திட்டத்தை நிறைவேற்றினார்கள்.
அதனால் மக்கள் படும் துன்பங்கள் பல இவ்வாறான நிலையில் பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை கருத்தை நாங்கள் முன்வைத்து பிறிதொரு நாளில் இக்கூட்டத்தை நடத்தி குறித்த தீர்மானத்தை முன்னெடுக்கலாம் என்பதன் அடிப்படையில் மன்னார் அரசாங்க அதிபர் மற்றொரு நாளில் இது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானத்தை எடுக்கலாம் என்று கூட்டத்தை நிறைவு செய்தார்.